தை பொங்கல் -மெமு சிறப்பு ரயில் இயக்க பொது மக்கள் கோரிக்கை..
Dhinasari Tamil January 07, 2026 02:48 AM


தைத்திருநாளையொட்டி முன் பதிவில்லாத பகல் நேர மெமு சிறப்பு இரயில்களை இயக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 15ஆம் தேதி தைப் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த நவ.,14 இல் தைத் திருநாளுக்கான இரயில் முன் பதிவு தொடங்கியது. பதிவு துவங்கிய 10 நிமிடங்களில் அனைத்து முன் பதிவு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
இதனால் ஏராளமான பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, முன் பதிவற்ற பகல் நேர மெமு இரயில்களை இயக்கிட வேண்டுமென ஏராளமானோர் இரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களது பணி நிமித்தமாக சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும், பொங்கல் திருநாளை தங்களது சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், தென் மாவட்டங்களில் மதுரை, சிவகங்களை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவை நடைபெறுவது வழக்கம். இதனைக் கண்டு களிக்கவும் ஏராளமான பொது மக்கள் ஆர்வத்துடன் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர்.


கடந்த ஆண்டு, தீபாவளி பண்டிகை மற்றும் தைத்திருநாளையொட்டி சென்னை-மதுரை, சென்னை-திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு பகல் நேர சிறப்பு மெமு ரயில்களை இரயில்வே நிர்வாகம் இயக்கியது.
ஆகவே, சென்னை -செங்கோட்டை சென்னை-தூத்துக்குடி, சென்னை-கோவை, கோவை-தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு மெமு சிறப்பு இரயில்களை இயக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, இரயில்வே நிர்வாகமானது, ஜனவரி 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சிறப்பு இரயில்களை இயக்குவதற்கான முன் அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென பயணிகள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

தை பொங்கல் -மெமு சிறப்பு ரயில் இயக்க பொது மக்கள் கோரிக்கை.. News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.