தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இனிமேல் அரசியல் கட்சிகள் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு 10 முதல் 30 நாட்களுக்கு முன்னதாகவே முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, ரோடு ஷோக்களை 3 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். 50,000-க்கும் அதிகமான மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு 30 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பாக, கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் நீண்ட நேரம் வெயிலில் நிற்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும் என்றும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.