கோவையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற ‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.
விழாவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “நமது பண்டிகைகள் பாரத தேசத்தின் கலாசாரத்தோடு இரண்டறக் கலந்தவை. இந்தத் தருணத்தில் கோவைக்கு வருகை தந்துள்ள பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின், நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளது தொண்டர்களுக்குப் பெரும் பலத்தைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தி.மு.க அரசு பதவியேற்றது முதல், இந்துக்களின் எந்தப் பண்டிகைக்கும் முதல்வர் வாழ்த்து தெரிவிப்பதில்லை என்று குற்றம் சாட்டிய அவர், பொங்கல் பண்டிகையை மட்டும் ‘சமத்துவ பொங்கல்’ என்ற பெயரில் முதல்வர் திசைதிருப்புவதாகத் தெரிவித்தார்.
“சிறுபான்மையினர் அவர்களது மதப் பண்டிகைகளைக் கொண்டாடுவதை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், பொங்கல் பண்டிகையை கொண்டாடாதவர்களுடன் சேர்ந்து, பானைகளில் பஞ்சு வைத்து ‘சமத்துவ பொங்கல்’ என முதல்வர் கொண்டாடுவது இந்து மக்களை ஏமாற்றும் செயலாகும். தமிழகத்தில் இல்லாத ஒரு நடைமுறையை முதல்வர் கட்டாயப்படுத்திப் புகுத்துகிறார்” என வானதி சீனிவாசன் விமர்சித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தமிழகம் வர உள்ளதாகவும், அதன் பிறகு பா.ஜ.க-வின் தேர்தல் பணிகள் மேலும் வேகம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார். கொங்கு மண்டலத்தில் தேசியத் தலைவர்களின் வருகை கட்சிக்குத் கூடுதல் வலிமையை அளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூடுதல் பாதுகாப்பு கோரியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “பாதுகாப்பு கோருவது என்பது வழக்கமான நடைமுறைதான். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, கரூரை விட டெல்லியில் அவருக்குச் சிறப்பான பாதுகாப்பு வழங்கப்படும்” என மறைமுகமாகச் சில சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பதிலளித்தார்.