பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சென்னையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்
TV9 Tamil News January 12, 2026 08:48 AM

பொங்கலுக்கு (Pongal) இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் சென்னையில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற தொடர் விடுமுறை நாட்களில் அதிக அளவு மககள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் தாம்பரம் தொடங்கி செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியை கடக்கவே கூடுதலாக 4 மணி நேரமாகிறது. இதனை தவிர்க்க சென்னை போக்குவரத்து காவல்துறை தற்போது போக்குவரத்து மாறங்களை செய்துள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெளியூருக்கு செல்லும் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த போக்குவரத்து மாற்றங்கள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 12, 13, 14, 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “தைப்பொங்கல் அல்ல, தேர்தல் பொங்கல்”.. ரூ.3,000 ரொக்கப்பரிசு குறித்து சீமான் விமர்சனம்!!

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

பேருந்து நிலையங்களை எளிதாக அடையவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சென்னை புறநகரில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட உள்ளன.

  • அதன்படி, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை வழியாக நல்லம்பாக்கம் கிரஷர் சந்திப்பை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கீராப்பாக்கம் அல்லது வேங்கம்பாக்கம் வழியாக மாப்பேடு நோக்கி திருப்பி விடப்படும்.
  • குன்றத்தூர் வெளிவட்ட சாலை வழியாக தாம்பரம் நோக்கி வரும் வாகனங்கள், மாதா இன்ஜினியரிங் கல்லூரி இணைப்பு சாலை வழியாக ஸ்ரீபெரும்புதூர் நோக்கி திருப்பி விடப்படும்.
  • காஞ்சிபுரம் மற்றும் ஒரகடம் வழியாக வரும் வாகனங்கள் முடிச்சூர் சாலை – வெளிவட்ட சாலை சந்திப்பில் மாற்றுப்பாதைக்கு திருப்பி விடப்படும்.
  • மதுரவாயல் பைபாஸ் மேம்பாலம் வழியாக வரும் வாகனங்கள் பூந்தமல்லி வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • மன்னிவாக்கம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஒரகடம் வழியாக பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்…தமிழக அரசு அரசாணை வெளியீடு!

கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை வழியாக வரும் கனரக வாகனங்கள், கோவளம் சந்திப்பு மற்றும் படூர் சந்திப்பு வழியாக நகரை சுற்றி மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்படும். செங்கல்பட்டு மற்றும் வண்டலூர் பகுதிகளில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் வாகனங்கள், சிங்கப்பெருமாள் கோவில், வண்டலூர் வெளிவட்ட சாலை மற்றும் பழைய மேம்பாலம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.