பல ஊர்களில் இருந்தும் பிழைப்பு தேடி சென்னை சென்றவர்கள் அங்கு வசித்து வருகிறார்கள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின் போது சென்னையில் தங்கியிருக்கும் வெளியூர்காரர்கள் தங்களின் ஊருக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும் பெரும்பாலானவர்கள் ஆம்னி பேருந்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.
அதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் பண்டிகை காலங்களில் அதிக அளவு கட்டணம் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக இந்த கொள்ளை நடந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் இதுபற்றி புகார் வரும்போது அரசு இது பற்றி விசாரித்து நடவடிக்கை கிடைக்கும் என சம்பந்தப்பட்ட அமைச்சர் சொல்வார். ஆனால் எதுவும் நடக்காது. சில இடங்களில் அபாராதம் விதிப்பதோடு நின்றுவிடும்.
அந்த வகையில் இந்த வருடமும் சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. வழக்கமாக சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு 1400 முதல் 1800 வரை வசூலிப்பார்கள். ஆனால் தற்போது 2000 முதல் 4200 வரை வசூலிக்கிறார்கள்.
அதேபோல் சென்னையிலிருந்து கோவைக்கு 800 முதல் 1200 மட்டுமே வசூலிப்பார்கள். ஆனால் தற்போது 3000 வரை வசூலிக்கிறார்கள். மேலும், சென்னையிலிருந்து இருந்து மதுரைக்கு 700 இருந்து 1100 வரை மட்டுமே வசூலிப்பார்கள். ஆனால் தற்போது 3500 வரை வசூலிக்கிறார்கள்.. இப்படி பல ஊர்களுக்கும் பேருந்து கட்டணம் அதிக அளவு உயர்ந்து இருக்கிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்.