சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உலக இந்தி தினம் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சீன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாகப் பங்கேற்று இந்தி மொழியின் சிறப்புகளைப் பகிர்ந்துகொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10-ஆம் தேதி உலக இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, ஷாங்காயில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீனாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வரும் சூழலில், அங்கு இந்தி பயிலும் சீன மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த விழாவில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
விழாவில் இந்தியத் துணைத் தூதர் பிரதிக் மாத்தூர் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இந்தி மொழி என்பது வெறும் பேச்சு வழக்கு மட்டுமல்ல, அது எல்லைகளைக் கடந்து உலக நாடுகளையும் மக்களையும் கலாச்சார ரீதியாக இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது,” என்றார். தொடர்ந்து, உலக இந்தி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியையும் அவர் வாசித்துக் காட்டினார்.
இந்த விழாவில் சீனாவில் வசிக்கும் இந்தியர்களும் பெருமளவில் பங்கேற்றனர். சீன மாணவர்கள் இந்தி மொழியில் கவிதைகள் வாசித்தும், உரையாற்றியும் தங்களின் மொழிப் புலமையை வெளிப்படுத்தினர். சீனப் பல்கலைக்கழகங்களில் இந்தி மொழிக்கு அதிகரித்து வரும் வரவேற்பை இந்த விழா பிரதிபலிப்பதாக அமைந்தது.