#BIG NEWS : உடனே டேங்க் ஃபுல் பண்ணிக்கோங்க! பெட்ரோல் விலை ரூ.200-ஐத் தொட போகுது..!
Top Tamil News March 01, 2026 09:48 AM

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு மிக முக்கியமான பாதை ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz). உலகின் 20 விழுக்காடு கச்சா எண்ணெய் இந்தப் பாதை வழியாகத்தான் பயணிக்கிறது. இந்தியாவின் 50 விழுக்காடு எண்ணெய் இறக்குமதி இந்த ஒரு குறுகிய கடல்வழியைச் சார்ந்தே உள்ளது. ஈரான் இந்த ஜலசந்தியை மூடினால் அல்லது போர் காரணமாகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், சவுதி அரேபியா, ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் விநியோகம் முற்றிலும் நின்றுவிடும். இது இந்தியாவில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாட்டை உருவாக்கும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை தற்போது பேரல் ஒன்றுக்கு 73 டாலரைத் தாண்டியுள்ளது. போர் தீவிரமடைந்து விநியோகச் சங்கிலி உடைந்தால், இது 110 டாலர் முதல் 130 டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஏற்கனவே எரிபொருள் விலைகள் அதிகமாக உள்ள நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்படும் இந்த விலை ஏற்றம், பெட்ரோல் விலையை 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கொண்டு செல்லக்கூடும் என அஞ்சப்படுகிறது. எரிபொருள் விலை உயர்ந்தால், காய்கறி முதல் அத்தியாவசியப் பொருட்கள் வரை அனைத்தின் விலையும் உயர்ந்து பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போகும்.

உலகளாவிய போர் பதற்றம் எப்போதும் பங்குச் சந்தையை (Share Market) அதலபாதாளத்திற்குத் தள்ளும். முதலீட்டாளர்கள் அச்சத்தில் பங்குகளை விற்பதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பெரும் வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பெயிண்ட், ஏவியேஷன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறை பங்குகள் அதிகம் பாதிக்கப்படும். 

போர் காலங்களில் பாதுகாப்பான முதலீடாகத் தங்கம் கருதப்படுகிறது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை சவரனுக்கு பல ஆயிரம் ரூபாய் உயரக்கூடும். இன்று கூட தங்கம் விலை இருமுறை உயர்ந்துள்ளது. அந்தவகையில், சென்னையில் இன்று (பிப்ரவரி 28, 2026) தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் பதற்றங்கள் காரணமாக, இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 5,200 ரூபாய் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. 

இதன் படி, சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 22 கேரட் 15,550 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,24,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தூய தங்கம் 24 கேரட் ஒரு கிராம் 16,582 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, மாதத்தின் இறுதி நாளில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 விழுக்காடு இறக்குமதியைச் சார்ந்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினாலும், மத்திய கிழக்கு நாடுகளின் பங்கு இப்போதும் முக்கியமானது. போர் நீடித்தால் இந்தியாவின் இறக்குமதி செலவு பல பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும், இது இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைக்கும். மேலும், ஈரான் மீதான இந்தத் தாக்குதல் ஒரு நீண்ட காலப் போராக மாறினால், அது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக அமையும். பெட்ரோல் விலை உயர்வு மற்றும் தங்கம் விலை உயர்வு புதிய உச்சத்தை எட்டும். எனவே, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இப்போதே மாற்று வழிகளை யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.