சின்ன பட்ஜெட் படங்களுக்கு மால்களில் தியேட்டர்கள் கொடுக்கப்படாததற்கு நடிகர் ஆரி அர்ஜூனன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை நடிகர் ஆரி சந்தித்தார். அப்போது அவரிடம், சின்ன பட்ஜெட் படங்கள் தரமானதாக இருந்தாலும் மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவதில்லையே?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அது ரொம்ப பிரச்னையாக உள்ளது. என்னோட பட தயாரிப்பாளர் கூட இந்த பிரச்னையை எதிர்கொண்டு வருகிறார். ஃபோர்த் ஃப்ளோர் படம் பிப்ரவரி 27ம் தேதி வெளியாகியது. இந்த படத்து மால்களில் தியேட்டர்கள் கொடுக்க மறுக்கிறார்கள். தற்போது அதற்காக சண்டை போட்டு வருகிறோம். என்ன காரணம் என கேட்டால், இந்த படத்துக்கு நீங்கள் செய்த விளம்பரம் போதவில்லை. தாய்கிழவி படம் பாருங்கள். எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள், அதனால் கொடுக்கிறோம் என தெரிவித்தார்கள்.
தாய்கிழவி படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரிடம் விளம்பரம் செய்யும் அளவுக்கு சக்தி இருக்கு, பொருளாதார வசதி இருக்கு, விளம்பரம் செய்வதற்கான யுக்தி இருக்கு. ஆனால் என்னோட படத்தின் தயாரிப்பாளர் திருப்பூரில் இருந்து சொந்தமாக தொழில் செய்து சம்பாதித்து ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் என நினைத்தவர். ஒரு படத்துக்கு என்ன செலவு செய்ய முடியுமோ அந்த சக்திக்குட்பட்டு செய்துள்ளார். ஆனால் எதை தீர்மானித்து இவர்கள் தியேட்டர் கொடுக்கிறார்கள் என்பதில் குழப்பம் நிலவுகிறது.
அந்த தயாரிப்பாளர் என்னிடம் வருத்தப்பட்டு பேசினார். டிக்கெட் வாங்கவில்லை என்றால் நீங்கள் காட்சியை ரத்து செய்யலாம். அதை விட்டு போட்டிக்கு கூட சேர்க்க மறுக்கிறார்கள். அப்படியென்றால் எந்த படம் ஓட வேண்டும், ஓடக்கூடாது என்பதை தியேட்டர் ஓனர்கள் தீர்மானிப்பது போல இப்போது மால்களும் முடிவெடுக்க தொடங்கியுள்ளது. என் ஊரான பழனியில் கூட சிங்கிள் ஸ்கிரீனில் தான் திரையிடுகிறார்கள்.
அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு தான் மவுசு என்றால், புதுமுகம் வைத்து எடுப்பவர்கள், சின்ன பட்ஜெட் படம் செய்பவர்கள் நிலைமையை யோசித்து பாருங்கள். மால்களில் படம் ரிலீஸ் செய்ய என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் செய்வோம். தியேட்டரில் ட்ரெய்லர் ப்ரோமோஷன் செய்யக்கூட பெரிய பட்ஜெட், சின்ன பட்ஜெட் படங்களுக்கு என தனி கட்டணம் நிர்ணயிக்கிறார்கள்” என ஆரி கூறியுள்ளார்.
ஏ.ராஜா தயாரிப்பில் ஆரி அர்ஜூனன், பவித்ரா, தலைவாசல் விஜய், சுப்பிரமணியம் சிவா, தீப்ஷிகா ஆகியோர் நடிப்பில் எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஃபோர்த் ஃப்ளோர். இந்தபடம் சைக்காலஜிக்கல் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.