காதல் ரீசெட் ரிப்பீட் படம் வாழ்க்கையில் என்னுடைய கடைசி நிமிடம் வரை மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளதாக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் உருவாகியுள்ள படம் “காதல் ரீசெட் ரிப்பீட்” படம். இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தில் முதன்மை கேரக்டரில் மதும்கேஷ் மற்றும் ஜியா சங்கர் இருவரும் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அர்ஜூன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் மார்ச் 6ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் என்ன என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் எல்லா படத்திலும் எனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் அளவுக்கு கேரக்டர் அமைந்துள்ளது. அப்படியான நல்ல கேரக்டர் தான் கொடுப்பாரு. ஒரு துளியும் கர்வமில்லாமல் நாம் செய்யும் வேலையை ரசிப்பார். நாம் சொல்லும் யோசனைகளை ஏற்றுக்கொள்வார். என்னை சொந்த அண்ணனாக பார்ப்பார். இந்த படத்தில் நடிக்க காரணமான தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்.
காதல் ரீசெட் ரிப்பீட் படம் வாழ்க்கையில் என்னுடைய கடைசி நிமிடம் வரை மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. நான் ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு பணம் பற்றாக்குறை இருந்தது. அந்த சமயம் இந்த படத்தில் நடிப்பதற்கு என்னை அணுகியிருந்தார்கள். நான் ஓகே சொன்ன நிலையில் ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை. எந்தவிதமான ஒரு தடையும் இல்லாமல் பேசிய சம்பளத்தில் 3ல் இரண்டு பங்கை உடனே எனக்கு அவரின் சொந்த பணத்தில் இருந்து ஏ.எல். விஜய் கொடுத்தார். முதலில் வீட்டைக் கட்டுங்கள், பின்பு மற்றதை பார்த்துக் கொள்ளலாம்.
Teaser of #KadhalResetRepeat !!
— AmuthaBharathi (@CinemaWithAB) February 14, 2026
A Rom-Com entertainer from director ALVijay with New Faces♥️✨
HarrisJayaraj Musical 🎶 pic.twitter.com/TfNIsCEWKw
அப்படி எனக்கு அவர் ஆதரவளித்தார். நாங்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறக்காவிட்டாலும், அண்ணன், தம்பியாக இருப்பது பூர்வ ஜென்ம புண்ணியம் தான். வீடு கட்டி முடிந்தது. இந்த படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்ததும் நான் தாத்தாவாக ப்ரோமோஷன் பெற்றேன். இந்த படத்தில் நான் நடிக்க ஆரம்பித்த பிறகு என் ராசி சிறந்ததாக மாறி விட்டது. அதனால் காதல் ரீசெட் ரிப்பீட் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.