டி20 உலகக்கோப்பை 2026-ன் சூப்பர்-8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வாழ்வா-சாவா போரட்டத்தில், சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
196 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணியில் விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் நங்கூரம் போல நிலைத்து நின்ற சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 97* ரன்கள் விளாசி அசைக்க முடியாத ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.
194 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடிய இந்த இன்னிங்ஸ், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு இந்திய வீரரின் சிறந்த தனிநபர் ஸ்கோராகவும், மிகப்பெரிய ரன் சேஸிங்காகவும் சாதனை படைத்துள்ளது.
வெற்றிக்குப் பிறகு பேசிய சஞ்சு சாம்சன், தனது இந்த வெற்றிக்கு ‘துரோணாச்சாரியார்கள்’ என விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். “கடந்த 10 ஆண்டுகளாக அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் நான் டக்அவுட்டில் அமர்ந்தே இருந்தேன்; ஆனால் அந்த நேரத்தில் விராட் மற்றும் ரோஹித் போன்ற ஜாம்பவான்கள் ஆட்டத்தை அணுகும் முறையைக் கவனித்துக் கற்றுக் கொண்டேன்” எனத் தெரிவித்தார்.
இக்கட்டான சூழ்நிலையில் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு பந்தையும் நிதானமாக எதிர்கொண்டதே இந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறிய சஞ்சு, இது தனது வாழ்நாளின் மிகச்சிறந்த நாள் என்றும் கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் உருக்கமாகக் கூறினார்.