சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அமைப்புகள் மதக்கலவரங்களைத் தூண்டுவதாகவும், அமைதியான வாழ்வை சீர்குலைப்பதே பிரதமர் மோடியின் நோக்கம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும், திருப்பரங்குன்றம் போன்ற ஆன்மீகத் தலங்களுக்குச் சென்றாலும் தமிழக மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று குறிப்பிட்ட அவர், இவர்களின் அரசியல் தந்திரங்கள் இங்கு எடுபடாது என்று ஆணித்தரமாகக் கூறினார்.
தமிழகத்தில் பாஜக நேரடியாக வளர வாய்ப்பில்லை என்பதால், அதிமுகவை முகமூடியாகப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் செய்வதாக செல்வப்பெருந்தகை சாடினார். தமிழகத்தின் உரிமைகளை எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அடகு வைத்துவிட்டதாகவும், எனவே தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் மண் இவர்களின் அரசியலுக்கு உகந்தது அல்ல என்று கூறிய அவர், தமிழக மக்கள் இவர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.