தமிழக அரசியல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 2, 2026) காலை 11 மணிக்குத் திடீரென டெல்லிக்கு விரைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, பாஜக மற்றும் அதிமுக இடையே நடைபெற்ற ரகசியத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பொதுக்கூட்ட மேடையிலேயே “மீண்டும் அதிமுக ஆட்சி” என இபிஎஸ்-ம், “மத்தியில் மீண்டும் என்டிஏ (NDA) ஆட்சி” எனப் பிரதமர் மோடியும் ஒருவருக்கொருவர் முரணாகப் பேசியது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், மதுரையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்க மறுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, பாஜக மேலிடத்துடன் நேரடியாகப் பேசி சுமுகமான தீர்வு காண அல்லது தனது அடுத்தகட்ட அதிரடி முடிவை அறிவிக்க டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.