சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களில் திமுக அரசு மேற்கொண்டு வரும் புதிய நடைமுறைகளை ‘விஞ்ஞானப்பூர்வ ஊழல்’ எனப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார். மாநகராட்சிப் பணிகளுக்கான இ-டெண்டர் முறையில், ‘கள ஆய்வுச் சான்றிதழ்’ என்ற புதிய நிபந்தனையைச் சேர்த்திருப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மை சீர்குலைக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளை ஒப்பந்ததாரர்கள் நேரில் சந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், இது ஆளுங்கட்சியினருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்களை வழங்கவும், பெரும் தொகையைக் கையூட்டாகப் பெறவும் வழிவகை செய்வதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முறைகேட்டின் காரணமாக, கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் ஒப்பந்தங்கள் அனைத்தும் மாநகராட்சி நிர்ணயித்த மதிப்பை விட 7% முதல் 12.51% வரை கூடுதல் தொகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அன்புமணி ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.
இ-டெண்டர் முறையையே சிதைத்து, அதிகாரிகளுடனான பேரம் பேசுதலுக்கு வழிவகுக்கும் இந்த ‘துண்டுச்சீட்டு’ ஊழல் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். மணல் கொள்ளை, பணி நியமன ஊழல் எனப் பல்வேறு துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் இதற்கான தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.