சின்னத்திரை சீரியல்கள் மூலம் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகை தேவி பிரியா, தேனியில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றபோது பெரம்பலூர் அருகே நேரிட்ட கோரமான கார் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் கார் டயர் பஞ்சரானதால், சாலையோரமாக நிறுத்தி ஓட்டுநர் முத்து கணேஷ் டயரை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, நின்றுகொண்டிருந்த தேவி பிரியாவின் கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக சிதைந்ததுடன், டயரை மாற்றிக்கொண்டிருந்த ஓட்டுநர் முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து நடந்த சமயத்தில் நடிகை தேவி பிரியாவும் அவரது உதவியாளரும் காரை விட்டு சற்று தள்ளி நின்றுகொண்டிருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு தேவி பிரியா காயமின்றி தப்பினார். இருப்பினும், அவரது உதவியாளர் திவாகர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தனது கண் முன்னாலேயே விபத்து நடந்து ஓட்டுநர் உயிரிழந்ததால் நடிகை தேவி பிரியா பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.