இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றது முதல், வீரர்களின் தேர்வு மற்றும் வரிசையில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக, கௌதம் கம்பீர் தனக்கு நெருக்கமான வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் வீரர்களைக் கட்டம் கட்டி வெளியேற்றுவதாகவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை 2024-க்குப் பிறகு இந்திய அணியின் வழக்கமான தொடக்க ஆட்டக்காரராக இருந்த சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணியில் இணையப் போகிறார் என்ற செய்திகள் வெளியானதிலிருந்து புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆசியக் கோப்பை தொடரில் ஷுப்மன் கில்லுக்காக சாம்சன் மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்டார், பின்னர் அணியிலிருந்தே நீக்கப்பட்டார். சாம்சனின் ஓபனர் இடம் இஷான் கிஷனுக்கு வழங்கப்பட்டது.
தற்போது சிஎஸ்கே வீரர் ஷிவம் தூபே மீது கம்பீரின் பார்வை திரும்பியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. டி20 உலகக்கோப்பையில் 156.60 ஸ்ட்ரைக் ரேட்டுடன் சிறப்பாக செயல்பட்ட தூபே, ஹர்திக் பாண்டியாவுக்கு முன்பாகக் களமிறங்கி ரன்கள் குவித்தார். ஆனால், ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் தொடர்களில் அவர் 7-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
பந்துவீச்சிலும் தூபே புறக்கணிக்கப்படுகிறார். டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு 17 சராசரியுடன் பந்துவீசிய போதிலும், அவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே வழங்கப்படுகின்றன. ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2 ஓவர்களில் 46 ரன்கள் கொடுத்த பிறகு, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியபோதும், தூபேவுக்கு ஒரு ஓவர் கூட வழங்கப்படவில்லை.
கம்பீருக்கு தோனியைப் பிடிக்காது என்பதால்தான் சிஎஸ்கே வீரர்களை அவர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இந்தத் தொடர் மாற்றங்கள் இந்திய அணியின் சமநிலையை பாதிப்பதாகக் கருதப்படுகிறது.