AFP via Getty Images டெஹ்ரானில் இன்று அதிகாலை நடந்த வெடிப்புகள் குறித்து தகவல் வெளியானதைத் தொடர்ந்து புகை மூட்டங்கள் எழுந்தன.
இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல் நான்காவது நாளை எட்டியுள்ளது. தலைநகர் டெஹ்ரான் உள்பட இரான் முழுவதும் உள்ள முக்கிய இலக்குகளை குறிவைத்து இரு நாடுகளும் பரவலாக தாக்குதலைத் தொடர்கின்றன.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்குள்ள ராணுவ தளங்கள் மீதும் இரான் தாக்குதல் நடத்துகிறது. சௌதியில் உள்ள அமெரிக்க தூதரகம் டிரோன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ஜோர்டானில் அமெரிக்க தூதரகப் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கில் உள்ள தனது குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதேநேரத்தில், உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான குறுகிய ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காக நேரிடும் என்று இரான் எச்சரித்துள்ளது. இது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு வித்திட்டுள்ளது.
சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் தூதரகப் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
அந்தப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் தீப்பிடித்ததாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் இரண்டு டிரோன்களால் தாக்கப்பட்டதை சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அறிக்கையில், இதன் விளைவாக "தீப்பிடித்ததால் கட்டடத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டது" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சௌதி அரேபியாவிற்கான அமெரிக்க தூதரகம் ஜெட்டா, ரியாத் மற்றும் தஹ்ரானுக்கான (Dhahran) தங்குமிடம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள எந்தவொரு இராணுவ நிலைகளுக்கும் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு அது கேட்டுக் கொண்டுள்ளது.
ஜோர்டான்: அமெரிக்க தூதரகத்தில் பணியாளர்கள் வெளியேற்றம்பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பணியாளர்களும் "தற்காலிகமாக வெளியேறிவிட்டனர்" என்று ஜோர்டானில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தூதரகத்தின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் வேறு எந்த விவரங்களும் இல்லை. ஆனால் நேற்று, தூதரகம் இதேபோன்ற ஒரு குறிப்பை வெளியிட்டு, பணியாளர்கள் "இலக்கு வைக்கப்படலாம்" என்பதால் வளாகத்தில் உள்ள தங்குமிடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை தாக்குதல்இரான் இஸ்ரேலின் பல பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேல் முழுவதும் மக்களுக்கு தொலைபேசி எச்சரிக்கைகளை அனுப்பிய பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்புகள் "அச்சுறுத்தலைத் தடுக்கும் வகையில் செயல்படுகின்றன" என்று இஸ்ரேல் ராணுவம் (ஐடிஎஃப்) கூறியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை - இரான் எச்சரிக்கைஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல முயற்சித்தால் தாக்குதலுக்கு இலக்காக நேரிடும் என்று இரானிய அதிகாரி கூறியுள்ளார்.
இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) தலைமைத் தளபதியின் ஆலோசகரான இப்ராஹிம் ஜப்பாரி அரசு தொலைக்காட்சியில் பேசுகையில் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
Getty Images கோப்புப் படம்
அவர் கூறுகையில், "யாரும் இந்தப் பகுதிக்கு வரக்கூடாது. அப்படி வந்தால் நிச்சயமாக எங்களிடமிருந்து கடுமையான தாக்குதலை சந்திக்க நேரிடும்" என்று கப்பல்களை எச்சரித்தார்.
அமெரிக்கர்கள் "இந்த பிராந்தியத்தின் எண்ணெபை அபகரிக்க முயல்கின்றனர்" என்றும், இரான் "பிராந்தியத்தில் உள்ள அவர்களின் எரிசக்தி குழாய்களைத் தாக்கும், இந்தப் பகுதியிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்காது" என்றும் ஜப்பாரி கூறினார்.
ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான கப்பல் பாதைகளில் ஒன்றாகும் மற்றும் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து நெரிசல் புள்ளியாகும். உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாக செல்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு