ஈரான் நடத்திய தாக்குதலால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளுக்கு இடையே, பலத்த பாதுகாப்புடன் நடந்து சென்றவாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்.டி.டி.வி செய்தி நிறுவனத்திற்குப் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, தனது நெருங்கிய நண்பரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியதாக அவர் தெரிவித்தார்.
ஈரானுக்கு எதிரான இந்த இக்கட்டான போர்க்காலத்தில், இஸ்ரேலின் பக்கம் நின்று உண்மையை ஆதரித்ததற்கும், இந்திய மக்களின் அளப்பரிய நட்புக்கும் பிரதமர் மோடிக்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இஸ்ரேல் மக்கள் பிரதமர் மோடியை மிகவும் நேசிப்பதாகவும், அவர் அங்குப் பெரிதும் மதிக்கப்படுபவர் என்றும் நெதன்யாகு புகழாரம் சூட்டினார். மோடியுடனான உரையாடலின் முழு விவரங்களை வெளியிட மறுத்த அவர், பிராந்திய அமைதிக்காகப் பல்வேறு உலகத் தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்தியா காட்டிய உறுதியான நிலைப்பாடு இஸ்ரேலுக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.