Doctor Vikatan: கோடைக்காலம் நெருங்குவதால், தெருக்களில் கற்றாழைச் சாறு விற்கும் கடைகள் அதிகரித்து வருகின்றன. கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்கும் என்கிறார்கள் சிலர். அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது என்கிறார்கள் இன்னும் சிலர். கற்றாழைச் சாற்றை எல்லோரும், தினமும் குடிக்கலாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.
சித்த மருத்துவர் அபிராமி
கற்றாழைச் சாறு குடிப்பது உண்மையில் ஆரோக்கியமானதுதான். ஆனால், அதைச் சரியாக, முறையாகச் செய்து குடிக்கிறோமா என்பதுதான் இதில் முக்கியம். கடைகளில் வாங்கிக் குடிப்பதானால், அது சுத்தமாக, சுகாதாரமாகத் தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்த பிறகு குடிக்க வேண்டும்.
கற்றாழையின் மேல் தோலைச் சீவிவிட்டு, உள்ளே இருக்கும் ஜெல் போன்ற சோற்றுப் பகுதியை எடுக்க வேண்டும். அந்தச் சோற்றுப் பகுதியை ஓடுகின்ற குழாய் நீரில் (running tap water) நன்றாகக் கழுவ வேண்டும். ஏனெனில், அதிலிருந்து வடியும் ஒருவித பால் போன்ற திரவம் கசப்புச் சுவையைக் கொண்டிருக்கும். அதைச் சாப்பிடக்கூடாது. கற்றாழையின் பிசுபிசுப்புத் தன்மை போகும்வரை நன்கு கழுவிவிட்டு, பின் அந்தச் சோற்றுப் பகுதியை மிக்சியில் அடித்துச் சாறாகக் குடிக்கலாம்.
கற்றாழைச் சாறு பருகுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பல. குறிப்பாக, அது வயிற்றுப் புண்களை ஆற்றும், மூல நோய் மற்றும் மலச்சிக்கல் (constipation) பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாகும்.
கற்றாழையின் பிசுபிசுப்புத் தன்மை போகும்வரை நன்கு கழுவிவிட்டு, பின் அந்தச் சோற்றுப் பகுதியை மிக்சியில் அடித்துச் சாறாகக் குடிக்கலாம். Doctor Vikatan: சருமத்துக்கும் கூந்தலுக்கும் தினமும் கற்றாழை ஜெல் பயன்படுத்துவது சரியா?
பெண்களுக்கு பிசிஓடி (PCOD) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பால் பீரியட்ஸ் சுழற்சி முறைதவறி இருக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைகளைச் சரிசெய்ய கற்றாழை உதவும். ஆண்மையை அதிகரிக்கும் என்பதால், ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் மேம்படும். உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விறைப்புத்தன்மைக்கும் இது உதவுகிறது.
வயிற்றுப்புண், வாய்ப்புண், பௌத்திரம் மற்றும் மூட்டுவலி போன்ற வீக்கம் சம்பந்தப்பட்ட (inflammatory conditions) அனைத்துப் பிரச்னைகளுக்கும் கற்றாழைச் சாறு நல்லது.
கற்றாழை மிகவும் குளிர்ச்சித்தன்மை உடையது. எனவே, சளி, சைனஸ் (sinusitis) மற்றும் ஆஸ்துமா போன்ற கபம் சார்ந்த நோய்கள் உள்ளவர்கள் கற்றாழைச் சாற்றைத் தவிர்க்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.