இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ‘யுவராஜ் சிங்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் அபிஷேக் சர்மா. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அவர் காட்டிய அதிரடி, அவரை மிகக் குறுகிய காலத்திலேயே இந்திய அணியின் நட்சத்திர வீரராக மாற்றியது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) தொடரில், அவரது ஆட்டம் பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அபிஷேக் சர்மா எதிர்கொண்டு வரும் விமர்சனங்கள் மற்றும் அவரது ஆட்டம் குறித்த விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க: விரைவில் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி.. மழை பெய்தால் யாருக்கு சாதகம்..? விதிகள் கூறுவது என்ன?
‘ரோலர் கோஸ்டர்’ பயணம்:இந்தத் தொடரில் அபிஷேக் சர்மாவின் புள்ளிவிவரங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. தொடரின் ஆரம்பக் கட்டத்தில் விளையாடிய போட்டிகளில் மூன்று முறை ரன் ஏதும் எடுக்காமல் (Ducks) ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் 55 ரன்கள் குவித்து ஃபார்முக்குத் திரும்பியது போலத் தெரிந்தாலும், அடுத்தடுத்த முக்கியமான சூப்பர்-8 போட்டிகளில் மீண்டும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார். இதுவரை ஆடிய 6 இன்னிங்ஸ்களில் அவர் எடுத்த மொத்த ரன்கள் 80 மட்டுமே. ஒரு தொடக்க வீரரிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் சராசரி மற்றும் ஸ்டிரைக் ரேட் இதில் மிஸ்ஸிங்.
மனோஜ் திவாரியின் கடுமையான விமர்சனம்:முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி, அபிஷேக் சர்மாவின் தற்போதைய அணுகுமுறை குறித்துக் கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அபிஷேக் மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு பெரிய நட்சத்திரமாகிவிட்டார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ ஆக வேண்டும் என்றால், அவர் தனது விக்கெட்டின் மதிப்பை உணர வேண்டும். வெறும் அதிரடி ஷாட்டுகளை மட்டும் நம்பி விளையாடுவது உலகக் கோப்பை போன்ற பெரிய மேடைகளில் எடுபடாது. அவர் தனது பேட்டிங் மனநிலையை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இர்பான் பதான் கொடுத்த ஆலோசனை:அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தில் உள்ள பலவீனம் குறித்துப் பல முன்னாள் வீரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்தவகையில், முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறும்போது, அபிஷேக் சர்மா கிரீஸை விட்டு வெளியே வந்து ஆடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆனால், சர்வதேச பந்துவீச்சாளர்கள் அவரது பலவீனத்தைக் கண்டறிந்து, பந்தை நேர்க்கோட்டில் (Straight line) வீசி அவரைத் திணறடிக்கின்றனர். அவர் ‘V’ பகுதியில் (நேராக) ஆடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என பதான் அறிவுறுத்தியுள்ளார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே தேவையற்ற ரிஸ்க் எடுத்து விக்கெட்டைப் பறிகொடுப்பது இந்திய அணியின் ஸ்கோரை வெகுவாகப் பாதிக்கிறது என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.
கேப்டன், பயிற்சியாளர் ஆதரவு:தொடர் தோல்விகளுக்கு மத்தியிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் அபிஷேக் சர்மாவுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகின்றனர். அபிஷேக்கின் அதிரடி பாணிக்கு கெளதம் முட்டுக்கட்டை போடவில்லை. எனினும், “பயமில்லாமல் ஆடுவதற்கும், பொறுப்பற்ற முறையில் ஆடுவதற்கும் வித்தியாசம் உண்டு” என்பதை அபிஷேக் உணர வேண்டும் என கம்பீர் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க:3வது முறையாக அரையிறுதியில் மோதும் இந்தியா – இங்கிலாந்து.. இதுவரை யார் ஆதிக்கம்?
காத்திருக்கும் சவால்:இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் வேளையில், அபிஷேக் சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நீண்ட கால வாய்ப்பு ஒரு வரப்பிரசாதமாகும். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி போன்ற வாழ்வா-சாவா ஆட்டங்களில் அவர் நிரூபிக்கத் தவறினால், அவரது உலகக் கோப்பை கனவு கேள்விக்குறியாகலாம்.