ஈரான் - இஸ்ரேல் பிரச்சினையால் இந்தியாவில் பெட்ரோல் & டீசல் விலை உயருமா?
ET Tamil March 03, 2026 09:48 PM
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பகுதியில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இருப்பினும், தற்போது இந்தியாவில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில், இந்தியாவில் 25 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இருப்பு இருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய், எல்பிஜி மற்றும் எல்என்ஜி இறக்குமதி செய்வதற்கான பிற ஆதாரங்களை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. மேலும், நம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கச்சா எண்ணெய், எல்பிஜி மற்றும் எல்என்ஜி தொடர்பான எங்கள் நிலைப்பாடு நல்ல நிலையில் வசதியாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதாக ஈரானின் அரசு ஊடகம் பிப்ரவரி 28 அன்று தெரிவித்தது. ஹார்முஸ் ஜலசந்தி கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கான உலகின் மிக முக்கியமான போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகும் உலகின் மொத்த கச்சா எண்ணெயில் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்கிறது.
இந்தியாயைப் பொறுத்தவரையில், தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய 88 முதல் 90 சதவீத கச்சா எண்ணெயை மற்ற நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. உலகின் பல நாடுகள் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. அமெரிக்கா உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது. அமெரிக்காவைத் தவிர, சவுதி அரேபியா, ரஷ்யா, கனடா, சீனா, ஈராக், ஈரான், பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளாக இருக்கின்றன.
இருப்பினும், இந்தியா நீண்ட காலமாக ரஷ்யா, சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. ஆனால், தேவைப்பட்டால் இந்தியா எந்த நாட்டிலிருந்தும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யலாம். எனவே உள்நாட்டில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் திட்டம் அரசிடம் உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயராது என்றே தெரிகிறது.