Reuters
இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல் நான்காவது நாளை எட்டியுள்ளது. தலைநகர் டெஹ்ரான் உள்பட இரான் முழுவதும் உள்ள முக்கிய இலக்குகளை குறிவைத்து இரு நாடுகளும் பரவலாக தாக்குதலைத் தொடர்கின்றன.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்குள்ள ராணுவ தளங்கள் மீதும் இரான் தாக்குதல் நடத்துகிறது. பஹ்ரைனில் அமெரிக்க விமானப்படை தளத்தின் முக்கிய கட்டளை தலைமையகம் இரான் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் "மறு அறிவிப்பு வரும் வரை" மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சௌதியில் உள்ள அமெரிக்க தூதரகம் டிரோன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ஜோர்டானில் அமெரிக்க தூதரகப் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கில் உள்ள தனது குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலுக்கு 'விரைவில்' பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
கேபிள் நெட்வொர்க்கான நியூஸ் நேஷனின் செய்தியாளர் ஒருவர், "இரானுக்குள் துருப்புகளை அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்" என்றும் டிரம்ப் தன்னிடம் கூறியதாக எக்ஸ்-இல் பதிவிட்டார்.
அதேநேரத்தில், உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான குறுகிய ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காக நேரிடும் என்று இரான் எச்சரித்துள்ளது. இது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு வித்திட்டுள்ளது.
இரான் அதிபர் அலுவலகத்தைத் தாக்கியதாக இஸ்ரேல் தகவல்இரான் அதிபர் அலுவலகத்தை தனது விமானப்படை தாக்கியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (ஐடிஎஃப்) தெரிவித்துள்ளது.
டெலிகிராமில் ஐடிஎஃப் வெளியிட்ட அறிக்கையில், அதிபர் அலுவலகம் மற்றும் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மீது "ஏராளமான வெடிமருந்துகள்" வீசப்பட்டதாகக் கூறுகிறது.
மேலும் அந்த அறிக்கையில், ஒரு ராணுவ பயிற்சி நிறுவனம் மற்றும் "கூடுதல் முக்கிய ஆட்சி உள்கட்டமைப்பு" ஆகியவையும் தாக்கப்பட்டதாகச் சொல்கிறது.
இரானின் முன்னாள் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இந்த வளாகத்தைப் பயன்படுத்தினார் என்று ஐடிஎஃப் கூறுகிறது. வார இறுதியில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் காமனெயி தனது சொந்த வளாகத்தில் கொல்லப்பட்டார்.
டெஹ்ரான் மற்றும் பெய்ரூட்டில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தகவல்இரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது தாக்குதல்கள் நடத்தியதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐடிஎஃப்) உறுதிசெய்துள்ளன.
"டெஹ்ரான் மற்றும் பெய்ரூட்டில் உள்ள ராணுவ இலக்குகள் மீது ஒரே நேரத்தில் ஐடிஎஃப் தாக்குதல்கள் நடத்தி வருகிறது," என அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
ஐடிஎஃபின் அரேபிய மொழி செய்தித் தொடர்பாளர் அவிசெய் அட்ராயி "விரிவான தாக்குதல்களின் அலை" அரங்கேறி வருவதாக தெரிவித்துள்ளார்.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர் மற்றும் பல கிராமங்களில் உள்ள மக்கள் வெளியேறுமாறு "அவசர எச்சரிக்கை" வழங்கிய பிறகு ஒரு மணி நேரம் கழித்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ஹெஸ்பொலாவுக்குச் சொந்தமான கட்டளை மையங்கள் மற்றும் சேமிப்பு நிலைகளைக் குறிவைப்பதாக ஐடிஎஃப் தெரிவித்துள்ளது.
ஓமனில் வர்த்தக துறைமுகம் மீது டிரோன் தாக்குதல்ஓமனில் உள்ள துகம் துறைமுகத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் எரிவாயு டேங்க் ஒன்று குறிவைக்கப்பட்டதாக, அந்நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
"அதனால் ஏற்பட்ட பாதிப்பு, எந்த விதமான மனித உயிரிழப்புகளும் இல்லாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது," என அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் இதே துறைமுகம் டிரோன் தாக்குதலால் குறிவைக்கப்பட்டிருந்தது. அதில், ஒரு ஊழியர் காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திங்களன்று அண்டை நாடான கத்தாரில் உள்ள நிலைகளின் மீது இரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து திரவமாக்கப்பட்ட எரிவாயு உற்பத்தி நிறுத்தப்பட்டது, உலகில் ஐந்தில் ஒரு பங்கு உற்பத்தி கத்தாரில் தான் நடக்கிறது. சௌதி அரேபியா அதன் மிகப்பெரிய உள்ளூர் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
அமெரிக்கா-இரான் பேச்சுவார்த்தைகளில் ஓமன் முக்கிய மத்தியஸ்தராக இருந்துள்ளது. மிக சமீபத்திய பேச்சுவார்த்தை கடந்த மாதம் நடைபெற்றது. இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தப் பேச்சுவார்த்தைகளை "நல்ல தொடக்கம்" எனக் கூறியிருந்தார்.
பஹ்ரைனில் அமெரிக்க விமானப்படை தள கட்டளை தலைமையகம் அழிப்பா?பஹ்ரைனில் அமெரிக்க விமானப்படை தளத்தின் முக்கிய கட்டளை தலைமையகம் இரான் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இரானிய புரட்சிகர காவல்படை (IRGC) உடன் இணைந்த ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட காட்சிகளில், தொலைதூர இலக்குகளை ராக்கெட்டுகள் அலை போல் தாக்கியதைக் காட்டுகின்றன.
இரானிய புரட்சிகர காவல்படையின் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் பஹ்ரைனின் ஷேக் இசா பகுதியில் உள்ள அமெரிக்க கட்டளை மற்றும் பணியாளர் கட்டடத்தை அழித்ததாகவும், இந்த தாக்குதலில் எரிபொருள் டேங்க் வெடித்ததாகவும் அது கூறுகிறது.
பஹ்ரைனில் அமெரிக்க விமானப்படை தள கட்டளை தலைமையகம் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து அமெரிக்கா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
முன்னதாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் கடற்படைத் தளத்திலிருந்து புகை வெளியேறுவதைக் காண முடிந்தது.
மத்திய கிழக்கில் பஹ்ரைன் மற்றும் 12 நாடுகளில் இருந்து அமெரிக்க குடிமக்கள் உடனடியாகவெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் காரணமாக குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் "மறு அறிவிப்பு வரும் வரை" மூடப்படும் என்று அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
"அனைத்து வழக்கமான மற்றும் அவசர தூதரக நியமனங்களையும் நாங்கள் ரத்து செய்துள்ளோம்" என்று அது கூறியுள்ளது.
AFP via Getty Images டெஹ்ரானில் இன்று அதிகாலை நடந்த வெடிப்புகள் குறித்து தகவல் வெளியானதைத் தொடர்ந்து புகை மூட்டங்கள் எழுந்தன. சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் தூதரகப் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
அந்தப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் தீப்பிடித்ததாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் இரண்டு டிரோன்களால் தாக்கப்பட்டதை சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அறிக்கையில், இதன் விளைவாக "தீப்பிடித்ததால் கட்டடத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டது" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சௌதி அரேபியாவிற்கான அமெரிக்க தூதரகம் ஜெட்டா, ரியாத் மற்றும் தஹ்ரானுக்கான (Dhahran) தங்குமிடம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள எந்தவொரு இராணுவ நிலைகளுக்கும் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு அது கேட்டுக் கொண்டுள்ளது.
ஜோர்டான்: அமெரிக்க தூதரகத்தில் பணியாளர்கள் வெளியேற்றம்பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பணியாளர்களும் "தற்காலிகமாக வெளியேறிவிட்டனர்" என்று ஜோர்டானில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தூதரகத்தின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் வேறு எந்த விவரங்களும் இல்லை. ஆனால் நேற்று, தூதரகம் இதேபோன்ற ஒரு குறிப்பை வெளியிட்டு, பணியாளர்கள் "இலக்கு வைக்கப்படலாம்" என்பதால் வளாகத்தில் உள்ள தங்குமிடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை தாக்குதல்
Reuters இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு இரானிய ஏவுகணைகளை இடைமறிக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரானில் இருந்து கண்ட காட்சி.
இரான் இஸ்ரேலின் பல பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேல் முழுவதும் மக்களுக்கு தொலைபேசி எச்சரிக்கைகளை அனுப்பிய பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்புகள் "அச்சுறுத்தலைத் தடுக்கும் வகையில் செயல்படுகின்றன" என்று இஸ்ரேல் ராணுவம் (ஐடிஎஃப்) கூறியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை - இரான் எச்சரிக்கைஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல முயற்சித்தால் தாக்குதலுக்கு இலக்காக நேரிடும் என்று இரானிய அதிகாரி கூறியுள்ளார்.
இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) தலைமைத் தளபதியின் ஆலோசகரான இப்ராஹிம் ஜப்பாரி அரசு தொலைக்காட்சியில் பேசுகையில் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
Getty Images கோப்புப் படம்
அவர் கூறுகையில், "யாரும் இந்தப் பகுதிக்கு வரக்கூடாது. அப்படி வந்தால் நிச்சயமாக எங்களிடமிருந்து கடுமையான தாக்குதலை சந்திக்க நேரிடும்" என்று கப்பல்களை எச்சரித்தார்.
அமெரிக்கர்கள் "இந்த பிராந்தியத்தின் எண்ணெபை அபகரிக்க முயல்கின்றனர்" என்றும், இரான் "பிராந்தியத்தில் உள்ள அவர்களின் எரிசக்தி குழாய்களைத் தாக்கும், இந்தப் பகுதியிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்காது" என்றும் ஜப்பாரி கூறினார்.
ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான கப்பல் பாதைகளில் ஒன்றாகும் மற்றும் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து நெரிசல் புள்ளியாகும். உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாக செல்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு