வானியல் அதிசயமாகக் கருதப்படும் சந்திர கிரகணம், சூரியன்,பூமி,நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது நிகழ்கிறது. அப்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்து, அதன் ஒளியை மறைக்கும்.

இதுவே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.இந்த ஆண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று பிற்பகலில் நிகழ உள்ளது. பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வு மாலை 6.48 மணிவரை நீடிக்கும்.
குறிப்பாக மாலை 4.34 மணி முதல் 5.33 மணி வரை நிலவு முழுவதும் செம்மஞ்சள் நிறத்தில் தோன்றி ‘ரத்த நிலவு’ போல கண்கவர் காட்சியளிக்கும்.சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற நாட்களில் கோவில்களில் நடை சாத்துவது பாரம்பரிய நடைமுறையாக இருந்து வருகிறது.
அதன்படி தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்கள் இன்று காலை நேரத்திலேயே மூடப்பட்டன.அதிலும், குறிப்பாக பெரிய கோவில் (பிரகதீஸ்வரர் கோவில்) காலை பூஜைகள் நிறைவடைந்ததும், காலை 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் வெளியேறினர்.மாலை கிரகணம் முழுமையாக முடிந்த பின் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, இரவு 7.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. வானியல் நிகழ்வும் ஆன்மிக மரபும் இணையும் இந்த நாள், பக்தர்களிடையே சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.