ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் வரும் மார்ச் 5-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. இந்தப் போட்டி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கிளென் மெக்ராத் முக்கிய கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப் (MRF) வேகப்பந்து வீச்சு அகாடமியில் செய்தியாளர்களிடம் பேசிய மெக்ராத், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து பேசினார்.
“ஜஸ்பிரித் பும்ரா ஒரு பெரிய போட்டிகளுக்கான வீரர். இக்கட்டான சூழலிலும், அழுத்தங்கள் நிறைந்த பெரிய போட்டிகளிலும் பும்ரா தனது அபாரமான திறமையால் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். இது போன்ற சவாலான போட்டிகளில் விளையாடுவதை அவர் மிகவும் விரும்புவார். அரையிறுதிப் போட்டியில் பும்ரா மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது; அவர் இங்கிலாந்து அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்.
பும்ரா இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய 5 டி20 போட்டிகளில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 116 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். குறிப்பாக, மும்பை வான்கடே மைதானம் பும்ராவிற்கு மிகவும் பரிச்சயமான ஒன்று என்பதால், அங்குள்ள சூழலைப் பயன்படுத்தி அவர் இங்கிலாந்து வீரர்களை திணறடிப்பார் என மெக்ராத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெரிய அணிகள் இறுதிப்போட்டிகளில் எப்படிச் செயல்படும் என்பது குறித்து மெக்ராத் கூறுகையில், “நாங்கள் விளையாடிய காலங்களில், அரையிறுதி அல்லது இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதுதான் எங்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும். ஒருமுறை தகுதி பெற்றுவிட்டால், ஆட்டம் முடிந்துவிட்டது என்றுதான் நினைப்போம். ஏனெனில், பெரிய அணிகள் அழுத்தங்களை விரும்பி ஏற்கும். மேலும் அந்த சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தான் தனி சுகம் உள்ளது,” என்றார்.