மருமகனாவது மண்ணாங்கட்டியாவது..! எப்பதான் இவங்க திருந்துவாங்களோ.. குடும்ப பாசத்தை விட கிரிக்கெட் தான் முக்கியம்…. நேரலையில் ஷாஹீனை வறுத்தெடுத்த அப்ரிடி…!!!
SeithiSolai Tamil March 04, 2026 04:48 AM

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் சூப்பர்-8 சுற்றோடு பாகிஸ்தான் அணி வெளியேறியது, அந்த நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தோல்விக்குக் காரணம் யார் என்ற பரஸ்பர குற்றச்சாட்டு தொடர்பான விமர்சனங்கள் முன்னாள் வீரர்களிடையே தொடங்கிவிட்டது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாஹித் அப்ரிடி, தனது மருமகனும் வேகப்பந்து வீச்சாளருமான ஷாஹீன் அப்ரிடியின் மோசமான பந்துவீச்சை நேரலை தொலைக்காட்சியிலேயே கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில், 147 ரன்களுக்குள் எதிரணியைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் இருந்தது. ஆனால், கடைசி ஓவரில் ஷாஹீன் அப்ரிடி 22 ரன்களை வாரி வழங்கியதால் பாகிஸ்தானின் அரையிறுதி கனவு சுக்குநூறானது.

இதுகுறித்து Samaa TV-யில் சாஹித் அப்ரிடி பேசியதாவது, “ஷாஹீன் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆனால், ஒரு கடைசி ஓவரை எப்படி வீசுவது என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. வலது கை பேட்ஸ்மேன் விளையாடும்போது, ‘ரவுண்ட் தி விக்கெட்’ வந்து பந்துவீசுவது மிகப்பெரிய தவறு. தேர்டு மேன் மற்றும் பாயிண்ட் ஃபீல்டர்கள் உள்ளே இருக்கும்போது, ‘வைட் யார்க்கர்’ வீசுவது பேட்ஸ்மேனுக்கு சிக்ஸர் அடிக்க வழிவகுக்கும். இதையெல்லாம் எப்போதுதான் இவர்கள் கற்றுக்கொள்வார்களோ தெரியவில்லை. மீண்டும் மீண்டும் பழைய தவறுகளையே செய்கின்றனர் என்றார்.

உலகக் கோப்பையிலிருந்து அவமானகரமான முறையில் வெளியேறியுள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியதற்காக, ஒவ்வொரு வீரருக்கும் தலா 50 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என பிடிஐ (PTI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் வீரர்களின் ஊதியத்தைக் குறைப்பது அல்லது நிதி ரீதியான தண்டனை வழங்குவது குறித்து வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.