தமிழகம் முழுவதும் விளிம்பு நிலை மக்கள் 37.79 லட்சம் பேருக்கு ரூ.2,000 சிறப்பு நிதி - வரவு வைக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு!
Dinamaalai March 04, 2026 09:48 AM

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள 37.79 லட்சம் பயனாளிகளுக்குத் தலா ரூ.2,000 சிறப்பு நிதி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மாத ஓய்வூதியம் பெற்று வரும் முதியோர்கள், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று இந்தச் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவினருக்கு அவர்களது வழக்கமான ஓய்வூதியத்துடன் இந்தச் சிறப்பு நிதி சேர்த்து வழங்கப்பட்டுள்ளது: மொத்தம் 29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.3,200 (வழக்கமான ரூ.1,200 + சிறப்பு நிதி ரூ.2,000). 5.92 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.3,500 (வழக்கமான ரூ.1,500 + சிறப்பு நிதி ரூ.2,000). 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 (வழக்கமான ரூ.2,000 + சிறப்பு நிதி ரூ.2,000).

முதல்வர் தனது அறிவிப்பில்,  1.62 லட்சம் குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்கால உதவித்தொகையாக தலா ரூ.8,000 வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 விவசாயிகளுக்குப் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.2 ஆதார விலை வீதம் மொத்தம் ரூ.8.53 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1.31 கோடி பெண்களுக்குக் கோடைக்காலத் தொகுப்புடன் சேர்த்து தலா ரூ.5,000 ஒரே தவணையாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளும் திமுக அரசு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காகத் துணை பட்ஜெட்டில் மட்டும் ரூ.3,913.32 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. "தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்" என முதல்வர் தனது சமூக வலைதளப் பதிவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.