இந்தியா vs இங்கிலாந்து: அரையிறுதியின் முடிவை தீர்மானிக்கப் போவது யார்?
BBC Tamil March 05, 2026 02:48 PM
Getty Images

இந்தியா vs இங்கிலாந்து - இதுவொரு பிளாக்பஸ்டர் அரையிறுதிப் போட்டியாக இருக்கப்போகிறது. வான்கெடேவில் நடக்கும் இந்தப் போட்டிக்குள் இரு அணிகளுமே ஒரே மாதிரியான வெற்றிகளைத் தொடர்ந்து களமிறங்குகின்றன.

பரபரப்பான போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வந்திருப்பது அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்.

அதேபோல் தான் இங்கிலாந்தும். அவர்களின் கடைசி சூப்பர் 8 போட்டியில் தோற்க வேண்டிய சூழ்நிலையில் இருந்து நியூசிலாந்தை வீழ்த்தியது.

எப்போதுமே கடினமான போட்டியை வென்று வருவது எந்த அணிக்குமே கூடுதல் நம்பிக்கையைக் கொடுக்கும்.

தடுமாறும் இங்கிலாந்து டாப் ஆர்டர் Getty Images இந்த உலகக் கோப்பையின் 7 போட்டிகளில் மொத்தம் 62 ரன்களே எடுத்திருக்கிறார் ஜாஸ் பட்லர்

இந்திய அணியைப் பொறுத்தவரை இங்கிலாந்தை விட நல்ல நிலையில் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். இங்கிலாந்து அணிக்கு பேட்டிங்கில் பெரிய குறைபாடு இருக்கிறது. அவர்களின் ஓப்பனர்கள் இன்னும் நல்ல தொடக்கம் பெறத் தவறுகிறார்கள். ஃபில் சால்ட், ஜாஸ் பட்லர் இருவருமே தொடர்ந்து தடுமாறுகிறார்கள். அதனால், பவர்பிளேவில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்கிறது. அதனால், இந்த அரையிறுதியில் இந்திய அணி பந்துவீச்சில் நல்ல தொடக்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு நன்றாகவே இருக்கிறது.

அதேசமயம், இங்கிலாந்து நல்ல தொடக்கம் பெறுவதற்கு ஏற்ற ஒரு மைதானம் என்றால் அது இந்தப் போட்டி நடக்கும் வான்கெடே தான். இங்கிலாந்தின் ஆட்ட முறைக்கு ஏற்ற ஆடுகளம் அது. நல்ல பவுன்ஸ் இருக்கும். ஐபிஎல் அரங்கில் ஜாஸ் பட்லர் இங்கு ஏராளமான ரன்கள் அடித்துப் பார்த்திருக்கிறோம். இங்கு ரன்கள் கிடைக்கவில்லை என்றால், வேறு எங்கும் அவர்களுக்கு ரன் கிடைக்காது.

ஒருவேளை அவர்கள் இருவருக்கும் இந்தப் போட்டியில் ரன் வரத் தொடங்கினால், அது இந்தியாவுக்கு பெரிய சவாலாக அமையும். ஏனெனில், இருவருமே பெரிய ஸ்டிரைக் ரேட்டில் ரன் எடுக்கக்கூடியவர்கள்.

ப்ரூக் மீதான அழுத்தம்

இங்கிலாந்தின் மிகப் பெரிய பலமே அவர்களின் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டரின் பங்களிப்பு தான். வில் ஜேக்ஸ் தொடர்ச்சியாக இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். டாம் பான்டன், நியூசிலாந்துக்கு எதிராக நல்லதொரு செயல்பாட்டைக் கொடுத்தார். அந்தப் போட்டியில் ரெஹான் அஹமதுவும் கூட முக்கியமான கட்டத்தில் அதிரடி காட்டினார்.

அவர்கள் ஓரளவு நல்ல பங்களிப்பைக் கொடுத்தாலும், அது ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவரிடம் இருந்துதான் வருகிறது. அதனால், ப்ரூக் மீது அதீத எதிர்பார்ப்பு இருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. கேப்டன் ஹேரி ப்ரூக்கும் நல்லதொரு செயல்பாட்டைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இருந்தாலும், ஓப்பனர்களின் தொடர்ச்சியான ஏமாற்றம், மிடில் ஆர்டரின் நிலைத்தன்மையற்ற ஆட்டம் ஆகியவற்றால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்திய அணிக்கு இந்தப் பிரச்னை இல்லை என்றே நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பை முழுக்கவே ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்தனர்.

கடந்த போட்டியில் சஞ்சு சாம்சனின் மகத்தான ஒரு இன்னிங்ஸைப் பார்த்தோம். அவரைச் சுற்றி சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா என அனைவருமே நல்ல பங்களிப்பைக் கொடுத்தனர். அதனால், இந்திய அணி ஓரிரு பேட்டர்களை மட்டுமே நம்பிக் களமிறங்கப்போவதில்லை. அது இந்திய அணிக்கு மிகவும் சாதகமான அம்சம்.

பந்துவீச்சு - இந்தியாவின் பலம் Getty Images இந்தத் தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் வருண் சக்கரவர்த்தி - 12 விக்கெட்டுகள்

அதேபோல், இந்திய அணியின் இன்னொரு பெரிய பலம், அவர்களின் பந்துவீச்சில் இருக்கும் வெரைட்டி. அர்ஷ்தீப் சிங் புதிய பந்தில் நல்ல தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர். அவரால் பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்ய முடியும். ஹர்திக் பாண்டியா புதிய பந்தில் மெதுவாகப் போட்டாலும், ஆட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவார். அக்ஷர் பட்டேலுமே புதிய பந்தில் நன்கு கட்டுக்கோப்பாகப் பந்துவீசுகிறார். ஜஸ்ப்ரித் பும்ராவைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தனி ஆளாக ஆட்டத்தை மாற்றக்கூடியவர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை ஆட்டத்துக்குள் கொண்டுவந்ததைப் பார்த்தோம். இப்படி ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பௌலர்கள் நிறைய இருக்கிறார்கள்.

கடந்த சில போட்டிகளாக வருண் சக்கரவர்த்தியின் செயல்பாட்டில் மட்டும் சிறு சரிவு தெரிவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், இந்தப் போட்டியில் அவர் தன்னுடைய சிறந்த செயல்பாட்டைக் கொடுப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் துருப்புச் சீட்டாக அவர் இருப்பார் என்று நான் நம்புகிறேன்.

இந்தியாவின் பேட்டிங், பௌலிங்கும் பலமாக இருக்கிறது என்று சொன்னாலும், ஃபீல்டிங் மிகப் பெரிய பலவீனமாக இருக்கிறது. 13 வாய்ப்புகளை இந்த உலகக் கோப்பையில் தவறவிட்டிருக்கிறார்கள். இதில் இன்னொரு பிரச்னை என்னவெனில், அது மற்ற ஏரியாக்களிலும் தாக்கம் ஏற்படுத்தும். உதாரணமாக, அபிஷேக் ஷர்மா வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவே 2 கேட்ச்களைத் தவறவிட்டார். அது அவரது பேட்டிங்கிலுமே கூட எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற நாக் அவுட் போட்டிகளில் இப்படி வாய்ப்புகளைத் தவறவிடக்கூடாது. ஹேரி ப்ரூக் போன்ற ஒரு வீரருக்கு வாய்ப்பு கொடுத்தால், அது பெரிய பின்னடவை ஏற்படுத்திவிடும்.

இந்தப் போட்டியின் துருப்புச் சீட்டுகள்

இந்தியா - அபிஷேக் ஷர்மா: இந்த உலகக் கோப்பையில் இதுவரை அபிஷேக் ஷர்மாவுக்கு பெரிய ரன்கள் வரவில்லை. ஆனால், இந்தப் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களின் வேகம் அபிஷேக்கின் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன். வில் ஜேக்ஸ் ஆடும்போது மட்டும் கொஞ்சம் சாமர்த்தியாக விளையாடி ஸ்டிரைக்கை ரொடேட் செய்து சஞ்சு சாம்சனை ஆடவைக்க வேண்டும். வில் ஜேக்ஸை அடித்து ஆட நினைக்கக் கூடாது. அதை மட்டும் செய்துவிட்டால், சிறிய வான்கெடே மைதானத்தில் அவரைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும்.

அமெரிக்காவுக்கு எதிராக வேகப்பந்துவீச்சாளர்களும் ஸ்வீப்பர் கவர் ஃபீல்டர் வைத்து அபிஷேக் விக்கெட்டை எடுத்தார்கள் தான். ஆனால், அவர் பந்துவீசியது சுமார் 130 kmph வேகத்தில். ஆனால், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் சாதாரணமாகவே 140 kmph போடக்கூடியவர்கள். அதனால், அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஜேக்ஸை சமாளித்துவிட்டால் மிகப் பெரிய அபிஷேக் இன்னிங்ஸ் காத்திருக்கிறது.

Getty Images இந்த உலகக் கோப்பையில் 191 ரன்கள் எடுத்திருக்கும் வில் ஜேக்ஸ், 7 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்

இங்கிலாந்து - வில் ஜேக்ஸ்: இங்கிலாந்து விளையாடிய 7 போட்டிகளில் ஜேக்ஸ் 4 முறை ஆட்ட நாயகன் விருது வென்றிருக்கிறார். பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே பங்களிப்பைக் கொடுக்கிறார். பவர்பிளேவில் பந்துவீசும் அவர் அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் போன்றவர்களுக்கு நிச்சயம் சவால் கொடுப்பார். அதுமட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் கடைசி கட்டத்தில் வந்து அணியின் ரன்ரேட்டை உயர்த்துகிறார். நிச்சயம் அவரது சிறந்த உலகக் கோப்பை ஃபார்ம் இந்தப் போட்டியிலும் தொடரும் என்று கருதுகிறேன்.

இந்தப் போட்டியின் முக்கிய யுத்தம்

வருண் சக்கரவர்த்தி vs ஹேரி ப்ரூக்: இதுவொரு மிகமுக்கிய யுத்தமாக இருக்கப்போகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக ஹேரி ப்ரூக் அடித்த சதம், இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த இன்னிங்ஸ்களுள் ஒன்று. அவர் ஆஃப் சைடில் நன்றாக ஆடக்கூடியவர். அதனால், வருண் சக்கரவர்த்தியின் கூக்ளி மிகவும் முக்கியமானதாக இருக்கும். அவர் சரியான லென்த்தில் பந்துவீசினால் நிச்சயம் விக்கெட் வீழ்த்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ப்ரூக்கின் விக்கெட் இங்கிலாந்தின் இன்னிங்ஸில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தும்.

ஆதில் ரஷீத் vs ஹர்திக் பாண்டியா: மிடில் ஓவர்களில் இந்தியாவின் ரன் விகிதத்தைத் தீர்மானிப்பதில் இந்த யுத்தம் முக்கியப் பங்கு வகிக்கும். ஆதில் ரஷீத் இலங்கையில் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். நன்றாக பந்தைத் தூக்கிப் போட்டார். நன்கு திரும்பச் செய்தார். அப்படி தூக்கிப் போடும்போது ஹர்திக் பாண்டியா நிச்சயமாக பெரிய ஷாட் அடிக்கவே நினைப்பார். இந்தப் போட்டிக்கு முன்பாக அவர் சுமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ச்சியாக தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டதாகக் கேள்விப்படுகிறோம். அதனால், அவர் இந்த சவாலுக்கு நிச்சயம் தயாராகவே இருப்பார்.

Getty Images இந்தத் தொடரில் 156.36 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 172 ரன்கள் எடுத்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா

அதேசமயம் ஆதில் ரஷீத்துக்கும் இந்தப் போட்டியில் பந்துவீசுவது எளிதாக இருக்காது. இலங்கை ஆடுகளங்கள் சுழலுக்கு சற்று கூடுதல் சாதகமாக இருந்தன. அதுமட்டுமல்லாமல், அங்கு பவுண்டரி எல்லைகளுமே பெரியவை. இங்கு வான்கடே சற்று நேரெதிர். அதனால், அவருக்குமே இந்தப் போட்டி சற்று சவால் தருவதாகவே இருக்கும்.

(இந்தக் கட்டுரையை எழுதிய யோ மஹேஷ் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராகவும் இருக்கிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.