ராதிகா நடித்துள்ள தாய்கிழவி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ராதிகாவின் நடிப்பு மட்டுமில்லாமல் இப்படத்தில் மேக் அப் கலைஞராக பணியாற்றிய வினீஷ் விஜயன் தற்போது திரைத்துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். தாய்கிழவி படத்தின் மூலம் கமலின் கல்கி 2 மற்றும் ராஜமெளலி இயக்கும் வாரனாசி ஆகிய படங்களைல் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள தாய்கிழவி திரைப்படம் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 2026 ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் கழித்து முதல் வெற்றிப்படமாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தில் ராதிகா 80 வயது பவுனுத்தாய் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். ராதிகாவின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றாலும் அவரை 80 வயது கிழவியாக தத்ரூபமாக காட்டியவர் இப்படத்தின் மேக் அப் கலைஞர் வினீஷ் விஜயன். ஒரு முழுநீள படத்தில் இவர் பணியாற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் தாய்கிழவி படத்தில் இவரது திறமையைப் பார்த்தப் பின்னர் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் திறந்துள்ளன. இதுகுறித்து இடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
தாய்கிழவி படத்தின் மேக் அப் பற்றி பேசியபோது " காலை 8 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நாங்கள் 4 மணி நேரம் முன்பாக மேக் அப் பணிகளை தொடங்குவோம். அதேபோல் ஷூட் முடிந்ததும் மெக் அப் எடுக்க ஒன்றரை மணி நேரம் ஆகும். ராதிகா மேடம் மொத்தம் 20 நாட்கள் படப்பிடிப்பிற்கு வந்தார். பெரிய பட்ஜெட் படமென்றால் சின்ன சின்ன தவறுகளை வி.எஃப்.எக்ஸ் மூலம் சரி செய்து கொள்ளலாம் ஆனால் தாய்கிழவி சின்ன பட்ஜெட் படம். இதனால் எந்த வித சின்ன தவறும் நிகழ்ந்துவிடாமல் இருக்க என்மேல் முழு பொறுப்பு இருந்தது.
கமல் தன்னை பாராட்டியது குறித்து கூறுகையில் "படப்பிடிப்பின் போது ராதிகா மேடம் கமல் சாருக்கு புகைப்படங்களை அனுப்புவார். ப்ராஸ்தெடிக் மேக் அப் போடுவதில் ஒரு மாஸ்டர். அவருக்கு என்னுடைய வேலை பிடித்திருந்தது. தாய்கிழவி சிறப்பு திரையிடலின் போது கமல் சார் வந்திருந்தார். இடைவேளையின் போது அவரை வந்து சந்திக்க சொன்னார். நாங்கள் ஒரு மணி நேரம் பேசினோம். அப்போது மேக் அப்காக பயண்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து தொழில்நுட்பம் குறித்து நிறைய பேசினோம். சில புதிய தொழில்நுட்பங்களை கமல் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவருடான அந்த உடையாடலே எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது .
கேரளாவைச் சேர்ந்த வினீஷ் விஜயன் பிரபல திரைப்பட இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் ஆகியோருடன் சென்னையில் படித்தவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தனது ப்ராஸ்தெடிக் மேக் அப் கலையை தொடர்ச்சியாக பதிவிட்டு வந்துள்ளார். தனது நண்பரின் வழியாக சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தை வினீஷ் அனுகியுள்ளார். அப்படிதான் தனக்கு சிவகுமார் முருகேசன் இயக்கிய தாய்கிழவி படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாக அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
"தாய்கிழவி படத்தில் ராதிகா மேடமில் மேக் அப் பார்த்து ராஜமெளலி சார் எனக்கு ஃபோன் செய்தார். தற்போது அவர் இயக்கி வரும் வாரனாசி படத்தில் நான் பணியாற்றி வருகிறேன். ' என்று வினீஷ் தெரிவித்துள்ளார்