மக்களுக்கு குட் நியூஸ்..! ஏலக்காய் விலை கடும் சரிவு..
Top Tamil News March 05, 2026 04:48 PM

ஏலக்காய் கிலோவுக்கு 150 ரூபாய் குறைந்துள்ளதாகவும், இடுக்கி ஏலக்காய் சந்தையில் 1.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் குறைந்துள்ளதாகவும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஏற்றுமதியாளர் எஸ்.கே.எம்., தனவந்தன் கூறியதாவது: கவுதமாலாவில் ஏலக்காய் உற்பத்தி சரிந்ததால், நம் நாட்டின் ஏலக்காய்க்கு கடந்தாண்டு ஏப்ரல் 2025 முதல் அதிக விலை கிடைத்து வந்தது. ஏற்றுமதி விலையா க ஒரு கிலோ 2,600 ரூபாய் முதல் 2,950 வரையும், உள்நாட்டு விலையாக கிலோவுக்கு 2,400 ரூபாய் முதல் 2,600 ரூபாய் வரையும் விற்பனையாகி வந்தது.

ரம்ஜான் நோன்பு துவங்கியதால் அரபு நாடுகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஏலக்காய் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கிடைத்த ஆர்டர்களுக்கும் ஏலக்காய் அனுப்ப முடியாத நிலை உள்ளது. ஏலக்காய் சீசன் முடிவடைவதால் ஒரு கிலோ ஏலக்காய் தற்போது 2,400 ரூபாயிலிருந்து சராசரியாக 2,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இடுக்கி ஏலக்காய் சந்தைக்கு ஒருநாளில் ஒரு லட்சம் கிலோ வரத்து இருக்கும் நிலையில், கிலோவுக்கு 150 ரூபாய் வரை விலை குறைந்துள்ளதால் வர்த்தக மதிப்பு 1.50 கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது. ஏலக்காய்க்கு உள்நாட்டு தேவை இருப்பதால் இந்த விலையிலேயே நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு தெரிவித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.