தமிழக பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது,"கூடலூர் பகுதியில் பல தலைமுறைகளாக சிறு நிலங்களில் விவசாயம் செய்து வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், தமிழக அரசு பெரிய அளவிலான நிலங்களை “ரிசர்வ் ஃபாரஸ்ட்” ஆக அறிவிக்க இந்திய உச்சநீதிமன்றம் முன் மனு தாக்கல் செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

1969-ஆம் ஆண்டு ஜென்ம ஒழிப்பு சட்டத்தின் கீழ் அரசால் கையகப்படுத்தப்பட்ட சுமார் 80,087 ஏக்கர் நிலத்தில், 29,982 ஏக்கர் ஏற்கனவே வனநிலமாக மாற்றப்பட்டது. மேலும் 34,986 ஏக்கர் தேயிலைத் தோட்டங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மீதமுள்ள 15,000 ஏக்கர் நிலம் சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, ஒரு அல்லது இரண்டு ஏக்கர் நிலங்களில் பல தலைமுறைகளாக உழைத்து குடும்பங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலங்களே அவர்களின் ஒரே வாழ்வாதாரமாக உள்ளன.
இந்நிலையில், அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் 3,474 ஏக்கரை மட்டும் வருவாய் துறைக்கு மாற்றி, மீதமுள்ள 31,150 ஏக்கரை ரிசர்வ் ஃபாரஸ்ட் ஆக அறிவிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
இது அங்கு வாழும் மக்களை தங்கள் சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றும் அபாயத்தை ஏற்படுத்தும் முடிவாகும் என அவர் குற்றம்சாட்டினார்.
“வன பாதுகாப்பு” என்ற பெயரில் விவசாயக் குடும்பங்களின் வாழ்க்கையை சிதைக்கும் எந்த நடவடிக்கையும் ஏற்க முடியாது. மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற அடிப்படையில், திராவிட முன்னேற்றக் கழகம் அரசு இந்த மனுவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கூடலூர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து இன்று கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதாகவும், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.