ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் அண்மைக்கால அதிரடி ராணுவ நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத் ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார். ஈரானைத் தாக்குவதற்கும் அதன் தலைமைக்கு எதிராகச் செயல்படுவதற்கும் ஜனாதிபதி டிரம்ப் மட்டும் காரணமல்ல என்றும், இதற்கான திட்டங்களை வகுத்தது தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில், அமெரிக்கர்களை யாராவது அச்சுறுத்தினால் அவர்கள் எங்கு இருந்தாலும் தயக்கமின்றி வேட்டையாடப்படுவார்கள் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் ஈரான் அதிபர் மற்றும் அந்நாட்டுத் தலைமைக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த கடுமையான முடிவுகள் வெறும் ஆட்சி மாற்றத்திற்காக மட்டும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், உலக நன்மைக்காகவே இந்தப் போர் முன்னெடுக்கப்படுவதாகவும் ஹெக்சேத் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், முந்தைய அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார். இதன் மூலம் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிப் பங்களிப்பையும், அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டையும் அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.