மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். முன்னதாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்ப்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளையாட்டாகப் பேசியது பெரும் சர்ச்சையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், சஞ்சுவின் அபார ஆட்டத்திற்குப் பிறகு சூர்யகுமார் அவரை வெகுவாகப் பாராட்டினார். இதுகுறித்து சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத் பேசுகையில், “சூர்யகுமார் எனக்கும் ஒரு மகன் போன்றவர்; அவர் சஞ்சுவை எப்போதும் ஆதரிப்பவர். பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியது உள்நோக்கம் கொண்டது அல்ல” என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முன்னதாக அபிஷேக் சர்மா தொடர்ந்து சொதப்பியபோது, சஞ்சுவை அணியில் சேர்க்கலாமா என்று கேட்டதற்கு, “அபிஷேக் அல்லது திலக் வர்மாவுக்குப் பதிலாக சஞ்சுவை விளையாட வைக்கலாமா?” என்று சூர்யகுமார் சிரித்துக்கொண்டே கேட்டது சமூக வலைதளங்களில் கிண்டலாகப் பார்க்கப்பட்டது.
ஆனால், சஞ்சு சாம்சன் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை டி20 உலகக் கோப்பை அரைஇறுதிக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். சூர்யகுமார் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் சஞ்சுவுக்குப் பெரும் ஆதரவாக இருப்பதாகவும், அணியில் எந்த ஈகோவும் இல்லை என்றும் சஞ்சுவின் தந்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.