அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர், அமெரிக்காவிற்கு மிகப் பெரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் வெறும் ஒரு மாதம் நீடித்தாலே, அமெரிக்காவிற்கு சுமார் 18 லட்சம் கோடி ரூபாய் வரை செலவாகும் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.
போர் தொடங்கிய முதல் 24 மணி நேரத்திலேயே, வான்வழித் தாக்குதல்களுக்காக மட்டும் சுமார் 6,900 கோடி ரூபாயை அமெரிக்கா செலவு செய்துள்ளது.
கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் பிரம்மாண்டமான போர்க்கப்பல்களைப் பராமரிக்கவே ஒரு நாளைக்கு சுமார் 58 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், “ஈரானின் ராணுவ பலம் மற்றும் தலைமை இடங்கள் கடுமையாகச் சிதைக்கப்பட்டுவிட்டன. இந்தப் போர் இன்னும் சில வாரங்கள் அல்லது அதற்கும் மேல் நீடிக்கலாம். இப்போது பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய காலம் கடந்துவிட்டது” என்று கறாராகக் கூறியுள்ளார்.
அதே சமயம், “எங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்று ஈரானும் பிடிவாதமாக உள்ளது. இந்தப் போர் நீண்டுகொண்டே போனால் உலகளவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயரக்கூடும் என்றும், அமெரிக்கப் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.