உச்ச தலைவர் மற்றும் ராணுவ தளபதிகள் பலி என ஈரான் அடுத்தடுத்த பேரிழப்புகளைச் சந்தித்து வந்தாலும், அந்த நாடு சளைக்காமல் திருப்பி அடிப்பதற்கு அதன் பிரம்மாண்டமான புவியியல் அமைப்பே முக்கிய அரணாக உள்ளது. ஐரோப்பாவின் நான்கு பெரிய நாடுகளை இணைத்தால் எவ்வளவு நிலப்பரப்பு இருக்குமோ, அதைவிடப் பெரிய பரப்பளவைக் கொண்ட ஈரான், உலகின் 17-வது பெரிய நாடாகும். இந்த ‘வியூக ஆழம்’ (Strategic Depth) காரணமாக எதிரிப் படைகள் தலைநகர் டெஹ்ரானை எட்டுவது அவ்வளவு எளிதல்ல.
மேலும், சாக்ரோஸ் மற்றும் அல்போர்ஸ் போன்ற கரடுமுரடான மலைத்தொடர்களும், தஷ்ட்-இ லூத் போன்ற உப்புப் பாலைவனங்களும் ஈரானை ஒரு இயற்கை கோட்டையாக மாற்றியுள்ளன. இதனால் நவீன ராணுவ டாங்கிகளோ அல்லது வான்வழித் தாக்குதல்களோ ஈரானை முழுமையாக முடக்குவது என்பது எந்த ஒரு நாட்டிற்கும் சாத்தியமற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது.
மறுபுறம், நவீன ராணுவ பலம் கொண்ட இஸ்ரேல் ஒரு சிறிய நாடாக இருப்பதால், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் அதிகம் உள்ளது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 30% தங்கியிருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கினால், அது உலகப் பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்யும். அமெரிக்கா ஏற்கனவே ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயன்று தோல்வியையும், நீண்டகாலப் பாதிப்புகளையும் சந்தித்த வரலாற்றுப் பாடங்கள் உள்ளன.
ஈரானைப் பொறுத்தவரை, மத ரீதியான பிடிப்பு மற்றும் ‘புரட்சிகர காவல்படை’ போன்ற பலமான கட்டமைப்புகள் இருப்பதால், வெளிநாட்டிலிருந்து திணிக்கப்படும் எந்தவொரு மாற்றமும் நிலையானதாக இருக்காது. ரஷ்யா மற்றும் சீனாவின் மறைமுக ஆதரவும் ஈரானுக்கு இருப்பதால், இந்தப் போர் ஒரு நீண்ட கால ‘நிழல் போராக’ மாறும் சூழலே நிலவுகிறது.