இந்திய பெருங்கடலில் இலங்கையின் கடற்பரப்பில் ஈரான் போர் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியதில் 83 பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஹெக்ஸத் உறுதி செய்துள்ளார்.
நேற்று புதன்கிழமை அன்று சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழகி கப்பல் ஏவிய 'டார்பிடோ' குண்டு தாக்கியதில் குறித்த ஈரான் போர் கப்பல் மூழ்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் குறிப்பிடுகையில்; ''பேரில் வெற்றிக்காக மேற்கொண்ட தாக்குதல் இது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு எதிரியின் விமானத்தை மூழ்கடிக்க செய்ய இந்த குண்டு ஏவப்பட்டது.'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதி சடங்கு தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசின் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நேரத்தில், கமேனிக்கு அடுத்ததாக ஈரானில் புதிய உச்ச தலைவர் அறிவிக்கப்பட்டால் அவரும் கொல்லப்படுவார் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகங்களை ஈரான் தாக்கி வருகிறது.

இந்த சூழலில், ஐஆர்ஐஎன்எஸ் Dena என்ற ஈரானின் போர் கப்பலை அமெரிக்கா தாக்கியுள்ளது. இதில் சுமார் 180 பேர் பயணித்ததாக இலங்கை செய்திகள் தெரிவித்துள்ளன. அவர்களில் 32 பேரை இலங்கை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹெராத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கப்பலில் இருந்த 83 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 18 முதல் 25 வரை வங்காள விரிகுடாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியில் இந்த கப்பல் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.