பாக்தாத் சந்தையில் வாங்கப்பட்ட ஒரு அடிமை இந்தியாவில் அரசரான வரலாறு
BBC Tamil March 07, 2026 12:48 PM
NCERT கியாசுதீன் பால்பன் 1246 முதல் 1287 வரையிலான நாற்பது ஆண்டு காலம் தனது அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தினார்.

இல்துத்மிஷின் இளைய மகன் நசிருதீன் முகமது டெல்லி அரியணையில் ஏறியவுடனேயே டெல்லி சுல்தானகத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை மீண்டும் வரத் தொடங்கியது, இதில் சுல்தான் முகமதுவுக்கு பெரிய பங்கு எதுவும் இருக்கவில்லை.

முகமதுவின் ஆட்சிக் காலத்தில் அதிகப்படியான அதிகாரம் இருந்த மிக முக்கியமான அமைச்சரான கியாசுதீன் பால்பன்தான் இந்த வேலையைச் செய்தது.

பால்பன் 1246 முதல் 1287 வரையிலான நாற்பது ஆண்டுகளில் முதல் இரண்டு தசாப்தங்கள் சுல்தானின் பிரதிநிதியாகவும், அடுத்த இரண்டு தசாப்தங்கள் டெல்லி சுல்தானாகவும் இந்த அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தினார்.

அதிகாரத்தைப் பெறுவதற்கான அவரது பயணத்தில் இரண்டு ஆண்டுகள் தடை ஏற்பட்டது, அப்போது அவர் தனது அரசியல் எதிரிகளின் சூழ்ச்சிகளால் சுமார் இரண்டு ஆண்டுகள் அதிகாரத்திலிருந்து விலகி இருந்தார்.

பால்பன் காலத்தின் சாட்சியாக இருந்த வரலாற்றாசிரியர் ஜியாவுதீன் பரனி தனது 'தாரிக்-ஏ-ஃபிரோஸ்ஷாஹி' புத்தகத்தில்,"நசிருதீன் முகமது அரியணை ஏறியபோது அவருக்கு வயது வெறும் 17 தான். அவரிடம் ஆட்சி செய்வதற்கான எந்தப் பண்பும் இருக்கவில்லை, ஆர்வமும் இல்லை. அவர் ஆட்சியின் முழுப் பொறுப்பையும் பால்பனிடம் விட்டுவிட்டார்," என எழுதியுள்ளார்.

"முகமது ஒரு மென்மையான, தாராளமான மற்றும் மதப் பற்றுள்ள மனிதராக இருந்தார், அவருடைய பெரும்பாலான நேரம் குர்ஆன் பிரதிகளை உருவாக்குவதிலேயே கழிந்தது. அந்த நேரத்தின் கொந்தளிப்பான சூழலில் இந்தப் பண்புகள் நல்லதாகக் கருதப்பட்டிருக்கலாம், ஆனால் சுல்தானாக இந்தப் பண்புகள் பொருத்தமற்றவை எனக் கருதப்பட்டன. பால்பன், சக அமைச்சர்களின் பொறாமை மற்றும் சதித்திட்டங்களுக்கு மத்தியிலும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்."

Primus Books வரலாற்றாசிரியர் ஜியாவுதீன் பரனியின் 'தாரிக்-ஏ-ஃபிரோஸ்ஷாஹி' புத்தகம். பாக்தாத்தில் அடிமையாக விற்கப்பட்டார்

நசிருதீன் முகமதுவின் இருபது ஆண்டுகால முழு ஆட்சிக் காலத்திலும் உண்மையில் பால்பன் தான் ஆட்சியை நடத்தி வந்தார்.

பரனி எழுதுகிறார், "இந்தக் காலத்தில் முகமதுவை ஒரு பொம்மை போல பால்பன் பயன்படுத்தினார். முழு அரசு நிர்வாகத்தையும் நடத்தினார், சுல்தானாக இல்லாவிட்டாலும் 'சத்ர' (குடை) போன்ற அனைத்து அரச சின்னங்களையும் பயன்படுத்தினார். முகமதுவின் முழு ஆட்சிக் காலமும் ஒரு வகையில் பால்பனின் ஆட்சிக் காலமாகவே இருந்தது."

கி.பி 1216-இல் பிறந்த கியாசுதீன் பால்பன் ஒரு இல்பாரி துருக்கியர் ஆவார். அவரது ஆரம்பகால பெயர் பஹாவுதீன். அவர் மங்கோலியர்களால் சிறைபிடிக்கப்பட்டு பாக்தாத்தில் ஒரு அடிமையாக விற்கப்பட்டார். அவரது உரிமையாளர் கவாஜா ஜமாலுதீன் அவரை டெல்லிக்கு அழைத்து வந்தார், அங்கு 1233-இல் இல்துத்மிஷ் அவரை விலைக்கு வாங்கித் தனது 'காஸ்தார்' (தனிப்பட்ட உதவியாளர்) ஆக்கிக் கொண்டார்.

இல்துத்மிஷுக்குப் பிறகு அவரது மகள் ரஸியா, அவரை 'அமீர்-ஏ-ஷிகார்' பதவிக்கு நியமித்தார். கி.பி 1249-இல் அவர் சுல்தான் நசிருதீனின் மகளை மணந்து கொண்டார். நசிருதீன் முகமது அவருக்கு 'நாயப்-ஏ-முமலிகத்' பதவியைக் கொடுத்தார். இந்தப் பதவியைப் பெற்றவுடனேயே பால்பன் முக்கியமான இடங்களில் தனக்குப் பிடித்தமானவர்களை அமர்த்தத் தொடங்கினார். அவர் தனது தம்பி கிஷ்லி கானை அரண்மனையின் நிர்வாகப் பணிகளின் தலைவராக ஆக்கினார்.

அந்தக் காலத்தில் மொராக்கோவிலிருந்து இந்தியாவிற்கு வந்த புகழ்பெற்ற பயணி இப்னு பதூதாவின் கூற்றுப்படி, "பால்பன் குட்டையான உருவம் கொண்ட ஒரு மனிதராக இருந்தார், பார்ப்பதற்கு ஈர்க்கக் கூடியவராக இல்லை, ஆனால் அவரது உயர்ந்த மனநிலையும் திறமையும் அந்த குறையை ஈடுசெய்தன."

மின்ஹாஜ்-இ-சிராஜ் தனது 'தபகத்-இ-நாசிரி' புத்தகத்தில் எழுதுகிறார், "பால்பனை மிகவும் திறமையான மனிதராக இல்துத்மிஷ் கருதினார், எனவே அவருக்கு உயர்ந்த பதவியைக் கொடுத்தார் மற்றும் ஒரு வகையில் தனது அதிர்ஷ்டத்தை கையில் எடுத்துக் கொண்டார். பால்பனின் அந்தஸ்து நாளுக்கு நாள் உயர்ந்தது, சில நாட்களில் அவர் சுல்தானுக்கு ஆலோசனை வழங்கும் நாற்பது உயரடுக்கு மனிதர்களின் குழுவான 'துர்கான்-ஏ-சிஹல்கானி'-யின் உறுப்பினரானார்."

பால்பனின் செல்வாக்கு இவ்வாறு வேகமாக வளர்ந்தது அவரது எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை, அவரைப் பதவியிலிருந்து நீக்க அவர்கள் சதி செய்யத் தொடங்கினர்.

Penguin Books முகமது தனது வாரிசாக பால்பனைத் அறிவித்திருந்தார். பால்பனின் நீக்கமும் மீண்டும் பதவியேற்பும்

சதீஷ் சந்திரா தனது 'ஹிஸ்டரி ஆஃப் மிடிவல் இந்தியா' (மத்தியகால இந்தியாவின் வரலாறு) புத்தகத்தில், "நசிருதீன் முகமதுவின் அரசவை அமைச்சர்கள் பால்பனைப் பதவியிலிருந்து நீக்கச் செய்தனர். பால்பனுக்குப் பதிலாக இமாதுதீன் ரெய்ஹான் பதவியேற்றார். துருக்கிய உயர்குடியினர் அனைத்து அதிகாரத்தையும் தங்கள் கையில் வைத்திருக்க விரும்பினாலும், பால்பனுக்குப் பிறகு இந்தப் பதவியை யார் ஏற்பது என்பதில் அவர்களால் உடன்பட முடியவில்லை, எனவே அவர்கள் ரெய்ஹானின் நியமனத்திற்குச் சம்மதித்தனர்." என்று குறிப்பிட்டுள்ளார்.

"பால்பன் தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்க்கவில்லை, ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்குள் அவர் தனது சில எதிரிகளின் நம்பிக்கையைப் பெறுவதில் வெற்றி பெற்றார். பால்பனின் கூட்டாளிகளின் அதிக வலிமை காரணமாக சுல்தான் முகமது, ரெய்ஹானைப் பதவியிலிருந்து நீக்கினார். சிறிது காலத்திற்குப் பிறகு ரெய்ஹான் கொல்லப்பட்டார். பால்பன் இதேபோல் தனது பல எதிரிகளின் வாயை மூடினார்."

பால்பன் இந்தப் பதவியில் பிப்ரவரி 1266-இல் முகமது இறக்கும் வரை இருந்தார்.

முகமது தனது இறப்பிற்கு முன்னால் பால்பனைத் தனது வாரிசாக அறிவித்திருந்தார். இல்துத்மிஷின் மகன்கள் யாரும் உயிருடன் இல்லை மற்றும் பால்பன் போன்ற தகுதியுள்ள ஒருவரால் மட்டுமே நாட்டில் நிலவிய அராஜகத்தைச் சமாளிக்க முடிந்தது என்பதே இதற்கு காரணம்.

தவிர, பால்பன் தன்னைத் துருக்கிய நாயகன் அஃப்ராசியாப்பின் வம்சாவளி என்று கூறி அரியணைக்கான தனது உரிமையை வலுப்படுத்திக் கொண்டார். சுல்தானாக பால்பன் மிகுந்த பொறுப்புடனும் கடின உழைப்புடனும் பணியாற்றினார்.

சுல்தானானதும் அவர் பழகியிருந்த அனைத்து ஆடம்பரப் பழக்கங்களையும் கைவிட்டார்.

"அமைச்சராக இருந்தபோது பால்பன் மது அருந்துவதிலும் பலவிதமான பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். வாரத்திற்கு மூன்று முறை அவர் விருந்துகள் அளிப்பார் மற்றும் விருந்தினர்களுடன் சூதாடுவார், ஆனால் அரியணை ஏறியதும் அவர் இந்த போதைப் பொருட்களிலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டார். அவரது ஒரே ஒரு ஆர்வம் மட்டும் நீடித்தது, அது வேட்டையாடுவது. அதையும் அவர் அரசியல் ரீதியாகப் பயன்படுத்தினார் மற்றும் வேட்டை என்ற பெயரில் தனது வீரர்களைத் தயார்படுத்தினார்." என்று ஜியாவுதீன் பரனி எழுதியுள்ளார்.

NCERT அமைச்சர்கள் சுல்தானின் முன்னால் வரும்போது, அவர்கள் தரையில் விழுந்து வணங்க வேண்டும் மற்றும் அரியணை அல்லது சுல்தானின் பாதத்தை முத்தமிட வேண்டும் என்று பால்பன் வலியுறுத்தினார். ஆடம்பரம் மற்றும் ராஜ மரியாதையில் நம்பிக்கை

இல்துத்மிஷைத் தவிர பால்பனுக்கு முன்பு வரை டெல்லி சுல்தான்களின் அந்தஸ்து ஏறக்குறைய சமமான அமைச்சர்களில் முதன்மையானவர் என்ற அளவிலேயே இருந்தது. இதனால் நிர்வாகத்தில் தொய்வு ஏற்படுவதாகவும், பேரரசில் ஒழுங்கின்மை பரவுவதாகவும் பால்பன் நம்பினார்.

அமைச்சர்களுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் சுல்தானுடன் எப்போதும் மோதல் இருந்து வந்தது, இது அவரது அதிகாரத்தை பலவீனப்படுத்தியது.

அமைச்சராகத் தனது பழைய அனுபவம் மற்றும் பண்டைய இரானிய அரசவையிலிருந்து உத்வேகம் பெற்று, கிரீடம் அமைச்சர்களின் மட்டத்திலிருந்து எங்கோ உயரத்தில் இருக்க வேண்டும் என்று பால்பன் உணர்ந்தார். இதை நினைத்துத்தான் அவர் சுல்தானைக் கடவுளின் பிரதிநிதியாகச் சித்தரிக்கத் தொடங்கினார்.

"பால்பனின் பேரரசு என்ற கருத்தாக்கத்தில், அமைச்சர்கள் சுல்தானின் முன்னால் வரும்போது அவர்கள் தரையில் விழுந்து வணங்கி அரியணை அல்லது சுல்தானின் பாதத்தை முத்தமிட வேண்டும் என்பதில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அரசவையிலோ அல்லது பொது இடங்களிலோ பால்பன் எப்போதும் கையில் வாள்களை ஏந்திய அரச பாதுகாவலர்களின் வளையத்திலேயே இருந்தார். இதன் காரணமாக சுல்தானுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு உடல் மற்றும் உளவியல் ரீதியான சுவர் எழுப்பப்பட்டது."

"டெல்லியில் இதற்கு முன்பு எந்த ஆட்சியாளரும் இவ்வளவு ஆடம்பரத்தையும் பகட்டையும் காட்டியதில்லை. அவரை யாரும் பார்க்காத நேரத்திலும் அவர் முறையான உடை அணிந்திருப்பார் என்று அவருடைய ஊழியர்கள் என்னிடம் சொன்னார்கள்."

முழு ஆட்சிக் காலத்திலும் அவர் தன்னை விட அந்தஸ்திலோ அல்லது தொழிலிலோ தாழ்ந்த எவரிடமும் பேசுவதைப் பார்க்க முடியவில்லை, அதேபோல் அறிமுகமில்லாதவர்களுடன் பழகுவதையும் பார்க்க முடியவில்லை.

"பால்பன் அனைத்து இந்திய முஸ்லிம்களையும் அதிகாரத்தின் முக்கியமான பதவிகளிலிருந்து நீக்கினார். உயர்குடி குடும்பத்தைச் சேராதவர்களை அரசுப் பதவிகளில் அமர்த்துவதை அவர் நிறுத்தினார். பல நேரங்களில் அவர் முக்கியமான வணிகர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார், ஏனெனில் அவர்கள் உயர்ந்த குடும்பத்தில் பிறக்கவில்லை." என்று சதீஷ் சந்திரா எழுதியுள்ளார்.

"நான் எப்போதெல்லாம் ஒரு தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஒருவரைப் பார்க்கிறேனோ, அப்போது என் கண்கள் எரியத் தொடங்குகின்றன, என் கைகள் எனது வாளை நோக்கிச் செல்கின்றன," என பால்பன் கூறியதாக பரனி குறிப்பிடுகிறார்,

"பால்பன் மக்களுடன் நகைச்சுவையாக பேசுவதை விட்டுவிட்டார். அவரது முன்னிலையில் ஒருவருக்கொருவர் நகைச்சுவையாக பேச யாருக்கும் துணிச்சல் இல்லை. தனது அரசவையில் அவர் ஒருபோதும் சத்தமாகச் சிரித்ததில்லை, யாரையும் சிரிக்க அனுமதித்ததும் இல்லை."

"பால்பன் தனது பேரரசின் அனைத்து பதற்றமான இடங்களிலும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றர்களின் வலையமைப்பை உருவாக்கினார், இதன் மூலம் சாத்தியமான கிளர்ச்சியாளர்களின் ரகசியச் செய்திகள் அவருக்கு வந்து சேர்ந்தன."

Orient Black Swan 'மத்தியகால இந்தியாவின் வரலாறு' (History of Medieval India) புத்தகத்தின் அட்டைப்படம். ராணுவப் படையெடுப்புகளுக்கு எதிர்ப்பு

மற்ற மன்னர்களைப் போல பால்பனுக்குப் போரில் வெற்றி பெற்று பெயர் எடுக்கும் தாகம் இல்லை.

ஆபிரகாம் ஈராலி எழுதுகையில், "இதற்குக் காரணம் அவர் ராணுவப் படையெடுப்புகளுக்கு எதிரானவர் என்பது கிடையாது. தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியே இன்னும் முழுமையாக பலமடையாத சூழலில், மங்கோலியர்கள் அடிக்கடித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது புதிய படையெடுப்பு பயணங்களில் நேரத்தை வீணடிப்பது முட்டாள்தனம் என்று அவர் நம்பினார்,." என்று குறிப்பிடுகிறார்.

"ஒருமுறை பால்பனின் அமைச்சர்கள் அவரிடம் ராணுவ வெற்றிகளைப் பெற்றுத் தனது பெயரை வரலாற்றில் என்றென்றும் பதிவு செய்யுமாறு கோரியபோது, பால்பன் இந்த முன்மொழிவை அடியோடு நிராகரித்தார்." என்று பரனி எழுதியுள்ளார்.

"எனது பேரரசின் முழு வருவாயையும் எனது ராணுவத்தை பலப்படுத்துவதற்காகச் செலவிட்டுள்ளேன். எனது படைகள் மங்கோலியத் தாக்குதலைச் சந்திக்க எப்போதும் தயாராக உள்ளன. எனது ராஜ்யத்தை நான் ஒருபோதும் விடமாட்டேன், இதிலிருந்து நான் விலகிப் போகவும் மாட்டேன்," என்று அவர் கூறினார்.

Penguin India தி ஏஜ் ஆஃப் ராத் புத்தகத்தின் அட்டைப்படம். ஹலாகுவுடன் தொடர்பு

டெல்லி சுல்தானகத்தின் அமைச்சராக பால்பன் மங்கோலியர்களின் சவாலை ராஜதந்திரம், விழிப்புணர்வு மற்றும் ராணுவ வலிமையின் ஒருங்கிணைப்பு மூலம் எதிர்கொண்டார். இதன் விளைவாக மங்கோலியர்களால் அவரது பேரரசுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்த முடியவில்லை.

"பால்பன் இரானில் மங்கோலியர்களின் பிரதிநிதியும் செங்கிஸ்கானின் பேரனுமான ஹலாகுவுடன் எப்போதும் நல்ல உறவைப் பேணி வந்தார். மங்கோலியர்கள் சட்லஜ் நதிக்கு அப்பால் முன்னேற மாட்டார்கள் என்று ஹலாகு அவருக்கு உறுதி அளித்தார். ஹலாகு கி.பி 1259-இல் ஒரு நல்லெண்ணத் தூதுக்குழுவை டெல்லிக்கு அனுப்பினார், பால்பன் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு அளித்தார், ஆனால், தான் ராணுவ ரீதியாகப் பலவீனமானவன் அல்ல என்ற எண்ணத்தையும் மங்கோலியர்களுக்கு அவர் ஏற்படுத்தினார்." என்று ஆபிரகாம் ஈராலி எழுதுகிறார்,

Getty Images ஹலாகு மேவாதி கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கை

பால்பனின் காலத்தில் மேவாட்டின் மேவ் இன மக்கள் டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பீதியை ஏற்படுத்தி இருந்தனர்.

"மேவாதி மக்கள் டெல்லிக்கு அருகிலுள்ள கிராமப்புறங்களில் கொள்ளையடித்து வந்தனர். பல சாலைகள் கடந்து செல்லும் அடர்ந்த காடுகளில் அவர்கள் மறைந்திருப்பார்கள். அவர்கள் பயணிகள் மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி அவர்களின் அனைத்துப் பொருட்களையும் கொள்ளையடிப்பார்கள். அவர்கள் மீதான பயத்தின் காரணமாக டெல்லியின் மேற்கு வாசல்கள் மதியத் தொழுகைக்குப் பிறகு மூடப்பட்டுவிடும். அந்தக் கொள்ளையர்களின் துணிச்சல் பால்பனுக்குப் பிடிக்கவில்லை," என பரனி எழுதுகிறார்.

"அவர்களைக் கையாளுவதற்கு அவரே ஒரு படைக்குத் தலைமை தாங்கினார். தொடர்ந்து இருபது நாட்கள் அவரது வீரர்கள் மேவ் மக்களின் மறைவிடங்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஒவ்வொரு மேவ் இனத்தவரின் தலைக்கும் ஒரு டங்கா (நாணயம்) மற்றும் அவரை உயிரோடு பிடித்தால் இரண்டு டங்கா வெகுமதி அளிக்கப்படும் என்று பால்பன் தனது வீரர்களிடையே அறிவித்தார். இதன் விளைவாகப் பல மேவாதி கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். சிலர் யானைக்காலால் மிதிக்கப்பட்டனர், சிலரின் உடல் துண்டாக்கப்பட்டது."

அவர்களை கட்டுக்குள் வைத்திருக்க பால்பன் டெல்லியைச் சுற்றியுள்ள அனைத்துக் காடுகளையும் வெட்டி அகற்றினார் மற்றும் அங்கு ராணுவச் சாவடிகளை அமைத்தார்.

Getty Images வங்காளக் கிளர்ச்சியை அடக்கினார்

பால்பனுக்குக் கொள்ளையர்களை விட அதிக சவால் கொடுத்தவர்கள் அவரது மாகாண ஆளுநர்கள். வங்காளம் ஒரு முக்கியமான மாகாணம் என்பதால் பால்பன் தனக்கு மிகவும் நம்பிக்கையான துக்ரில் கானை அங்கு ஆளுநராக நியமித்தார். துக்ரில் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அச்சமற்ற மனிதராக இருந்தார், ஆனால் வங்காளம் சென்ற சில காலத்திலேயே அவர் பால்பனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்.

"அப்போது துக்ரிலை அடக்க அவாத் ஆளுநர் அமீன் கானை பால்பன் அனுப்பினார், ஆனால் துக்ரில் அவரை எளிதாகத் தோற்கடித்தார். அப்போது பால்பன் வங்காளம் சென்று கிளர்ச்சியை அடக்கும் பொறுப்பை தானே ஏற்றார். பால்பன் தனது வீரர்களுடன் அங்கு சென்றபோது, துக்ரில் அங்கிருந்து திரிபுரா நோக்கி ஓடினார், பால்பன் தன்னைத் தொடர மாட்டார் என்ற நம்பிக்கையில் அவர் ஓடினார், ஆனால் பால்பன் அவரை அங்கேயும் துரத்தினார். அரச வீரர்கள் அவரைப் பிடித்துக் கொன்றனர்," என பரனி எழுதுகிறார்,

"துக்ரிலின் பிடிபட்ட வீரர்களுடன் பால்பன் லக்னௌதிக்குத் திரும்பினார். அங்குக் கிளர்ச்சி செய்யக் கூடியவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக முக்கியச் சந்தையின் இருபுறமும் தூக்கு மேடைகளை அமைத்தார், அவர் துக்ரிலின் அனைத்து மகன்களையும் மருமகன்களையும் தூக்கிலிட உத்தரவிட்டார்."

NCERT மகன் புக்ரா கானை வங்காள ஆளுநராக்கினார்

டெல்லி சுல்தானகத்தின் நிர்வாகத்தைச் சீரமைத்த பெருமை பால்பனையே சாரும். அவர் நிர்வாகத்தின் கண்ணியத்தை மீட்டெடுத்தார். அவரது கடுமையான சட்டங்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதில் இருந்த உறுதி, உயர்குடியினராக இருந்தாலும் சரி, தாழ்ந்த குலத்தவராக இருந்தாலும் சரி, அனைவரும் அவரது அதிகாரத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது.

அவர் கண்ணியம், மரியாதை மற்றும் வலிமையுடன் தனது ஆட்சியை நடத்தினார். கி.பி 1285-இல் பால்பனின் மூத்த மகனும் வாரிசுமான முகமது, முல்தானில் மங்கோலியர்களுடன் நடந்த போரில் கொல்லப்பட்டார். இந்தத் துயரம் பால்பனை உலுக்கியது.

"அவர் இந்தத் துயரத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்கப் பெருமுயற்சி செய்தார், ஆனால் அவரால் முடியவில்லை. பகலில் எல்லாம் சாதாரணமாக இருப்பது போலத் தனது அரசவையை நடத்தினார், ஆனால் இரவில் அவர் துக்கத்தில் கதறுவார், தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு தனது தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வார். மெதுவாக பால்பனின் ஆட்சி அதன் முடிவை நோக்கி நகரத் தொடங்கியது." என பரனி எழுதுகிறார்.

Getty Images டெல்லியில் உள்ள பால்பன் கல்லறை 71 வயதில் மரணம்

முகமது இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி 1287-இல் பால்பனும் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்தார்.

இரண்டாவது மகன் புக்ரா கானைத் தனது வாரிசாக அவர் உருவாக்கினார். புக்ரா கானை அழைத்து, "உனது சகோதரனின் மரணம் என்னை மரணப் படுக்கையில் அமர வைத்துவிட்டது. எனது வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடியலாம். இது நீ இல்லாதிருக்க வேண்டிய நேரம் அல்ல, ஏனென்றால் எனது இடத்தைப் பிடிக்க எனக்கு வேறு மகன் இல்லை. நீ என்னுடனேயே இருக்க வேண்டும். லக்னௌதிக்குச் செல்லும் ஆசையைக் கைவிடு" என்று அவர் கூறினார்.

ஆனால் புக்ரா கான் தனது தந்தையின் ஆலோசனையைக் கேட்கவில்லை.

"அவர் ஒரு பொறுப்பற்ற இளவரசராக இருந்தார். அவருக்கு டெல்லி அரியணை மீது எந்த ஆசையும் இல்லை. டெல்லியில் தங்கியிருந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு பால்பனின் உடல்நிலை தேறி வருவது போலத் தெரிந்தபோது, அவர் தனது தந்தையிடம் சொல்லாமல் லக்னௌதிக்குத் திரும்பினார்."

பால்பன் தனது அமைச்சர்களை அழைத்து, அவரது பேரன் குஸ்ருவை அரியணைக்குத் தயார் செய்யுமாறு கூறினார்.

பால்பன் கூறினார், "அவன் இளம் வயதினன் மற்றும் ஆட்சி செய்யத் தகுதியற்றவன் என்பதை நான் அறிவேன், ஆனால் நான் என்ன செய்ய முடியும்?"

இதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு சுல்தான் பால்பன் தனது கண்களை நிரந்தரமாக மூடினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.