வீடு புகுந்து பாலியல் அத்துமீறல் - "பெண்களுக்கு வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை" - டிடிவி தினகரன் கடும் கண்டனம்!
Dinamaalai March 07, 2026 11:48 PM

சென்னையில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலரின் செயல் குறித்தும், தமிழகத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்தும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சென்னையில் குடிபோதையில் இருந்த காவலர் ஒருவர் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் தளத்தில் காரசாரமான பதிவை வெளியிட்டுள்ளார்.

ராயப்பேட்டை பகுதியில் போதையில் இருந்த காவலர் ஒருவர், ஒரு பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"பெண்களைக் காக்க வேண்டிய சீருடை அணிந்த காவலர்களே, குடிபோதையில் பெண்களின் பாதுகாப்பைப் பறிக்கும் கொடூரர்களாக மாறி வருவது நெஞ்சை உலுக்குகிறது" என அவர் சாடியுள்ளார். தமிழகத்தில் எங்கும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதால், பெண்கள் தங்களது சொந்த வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் கொடூரமான சூழல் நிலவுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

"நிர்வாகத் திறமையற்ற திமுக அரசு, கஞ்சா மற்றும் போதையில் திரியும் இளைஞர்களையும், மதுபோதையில் அத்துமீறும் காவலர்களையும் வளர்த்து விடுவதாக" அவர் தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராயப்பேட்டை பகுதியில் போதையில் இருந்த காவலர் சூர்யா என்பவர், ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் அந்தப் போலீஸ்காரர் ஏற்கனவே பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.