காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை, ஆனால் அதைக் காதலியிடம் சொல்லும் முறைகள் வேண்டுமானால் மாறலாம்! இங்கிலாந்தில் ஒரு இளைஞர் தனது காதலைச் சொல்லப் பயன்படுத்திய வினோதமான முறை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகக் காதலைச் சொல்ல இளைஞர்கள் தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ செல்வது வழக்கம். ஆனால், இந்த வாலிபரோ ஒரு படி மேலே போய், தனது முழு குடும்பத்தையுமே அழைத்துக் கொண்டு இளம்பெண்ணின் வீட்டு வாசலுக்கே சென்றுவிட்டார்.
சினிமா பாணியில் “தேனு லேகே மே ஜாவாங்கா” (Tenu Leke Main Jawanga) என்ற பாடலுக்கு அந்த இளைஞரும் அவரது குடும்பத்தினரும் நடுரோட்டில் செம குத்தாட்டம் போட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண், தனது வீட்டின் பால்கனியில் இருந்து குடும்பத்துடன் பார்த்து வெட்கத்தில் சிரிக்கும் காட்சிகள் பார்ப்பவர் மனதை உருக்கும் வகையில் உள்ளது. ‘கர்கே கலேஷ்’ (Ghar Ke Kalesh) என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இப்போது லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.