“இன்னும் 2 வாரத்தில் ஊழலில் சிக்கிய அமைச்சர் சிறைக்கு செல்வார்”.. பரபரப்பை கிளப்பிய இபிஎஸ்!!
TV9 Tamil News March 08, 2026 11:48 AM

ஈரோடு, மார்ச் 08: ஊழலில் சிக்கிய அமைச்சர் 2 வாரத்தில் சிறைக்கு செல்வார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அந்தியூர்பாளையம் பவானி ரோட்டில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது, திமுக ஆட்சியில் தொழில் செய்ய அதிகமான நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அதிமுக ஆட்சி வந்ததும் நெருக்கடி தீர்க்கப்படும்.

இதையும் படிக்க : தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ரவி.. நேரில் சந்தித்து பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்..

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ரூ.10,000 வரவு:

அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.2,500 பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மு.க.ஸ்டாலின் ரூ.5,000 கொடுத்ததாக கூறுகிறார். ஏற்கனவே 3 மாதம் கொடுக்க வேண்டிய பணம், தேர்தல் வந்ததால் மக்களிடத்தில் செல்வாக்கு பெற வேண்டும் என்று ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 வழங்கப்பட்டு உள்ளது. அதிமுக ஆட்சி வந்ததும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வங்கி கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப்படும். மத்திய அரசு எங்களுடன் உள்ளது. தேவையான நிதியை பெறுவோம் என்றார்.

அழுத்தம் கொடுத்ததாலே ரூ.1,000 கிடைத்தது:

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கொடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள். இரண்டரை ஆண்டுகள் கழித்து இந்த பணம் கொடுக்கப்பட்டது. அதுவும், பெண்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அதிமுக அழுத்தம் கொடுத்த பிறகு குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 கிடைத்தது. சேலத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் 1,050 ஏக்கரில் மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்தேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டது. அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் கால்நடை பூங்கா செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு விவசாயிகளுக்கு கலப்பின பசுக்கள் விலையில்லாமல் கொடுக்கப்படும். எனவே விவசாயிகள் விரோத இந்த அரசு தேவையா?

2 வாரத்தில் ஊழல் அமைச்சர் சிறையில்:

தமிழகத்தில் அனைத்து அமைச்சர்களும் ஊழலில் ஈடுபடுகின்றனர். அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்திருக்கிறது. தமிழக நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மீதான ஊழலை அமலாக்கத் துறை ஆதாரத்துடன் கண்டறிந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அரசுக்கு 3 முறை அறிக்கை கொடுத்து உள்ளது. அரசுக்கு 3 முறை அறிக்கை கொடுத்து உள்ளது. இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

இதையும் படிக்க : திருச்சியில் தவெக பிரம்மாண்ட மாநாடு? விஜய்யின் அதிரடி திட்டம்.. பரபரக்கும் அரசியல் களம்..

அதிமுக சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இன்னும் 2 வாரத்தில் முடிவு தெரியும். அந்த அமைச்சர் இங்கே இருப்பாரா? உள்ளே (சிறையில்) இருப்பாரா? என்பது தெரியும். அதிமுக ஆட்சி மீண்டும் மலர இரட்டை இலை சின்னம் அல்லது கூட்டணி கட்சி வேட்பாளர்களின் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.