நமக்கு வலியே தெரியாமல் ரத்தத்தை அட்டைகள் உறிஞ்சுவது எப்படி தெரியுமா?
BBC Tamil March 08, 2026 01:48 PM
Getty Images

ஆங்காங்கே தொகுப்புகளாக சோலைக் காடுகள், திரும்பிய திசையெங்கும் புல்வெளிக் காடு என ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உச்சியில் பல்லுயிர்ச்சூழல் பரந்து விரிந்திருந்தது.

திரும்பிய திசையெங்கும் காணப்பட்ட ஊசிப் புல், கருணைக் கீரை, பட்டைப் புல் போன்ற பல்வகையான புற்களை மேய்ந்துகொண்டு, மெத்தென்ற புல் மெத்தையில் காட்டு மாடு கூட்டம் ஒன்று சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தன.

அவற்றை ரசித்துக்கொண்டே மலையேறிக் கொண்டிருந்த நேரத்தில், மழைக் காடுகளில் பொதுவாகக் காணப்படும் அந்த உயிரினத்தைக் கண்டேன்.

நாங்கள் கடந்து சென்ற பாதையில் எங்கும் காண முடிந்த அட்டைகள், அமைதியாக எங்கள் கால் பூட்ஸ்களுக்குள் ஏறிக்கொண்டு ரத்தம் குடித்துக் கொண்டிருந்தன.

கால்சட்டையை மேலே தூக்கியதும் சாக்ஸுக்கு மேலே இரண்டு அட்டைகள் ஒரே இடத்தில் அருகருகே ஒட்டிக் கொண்டிருந்தன. எவ்வளவு நேரமாக என் ரத்தத்தைப் குடித்துக் கொண்டிருந்தன என்று தெரியவில்லை.

மழைக்காடுகளில் காணப்படும் இந்த அட்டைகள் ஏன் நமது ரத்தத்தைக் குடிக்கின்றன, அவற்றின் வாழ்க்கை எப்படிப்பட்டது, அட்டைகள் நம் ரத்தத்தைக் குடிக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற கேள்விகள் ஒருசேர எழுகின்றன.

Subagunam Kannan அட்டைகள் ரத்தம் குடிப்பது ஏன்?

இயற்கையில் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட உயிரினங்களில் ஒன்று அட்டைகள். காடுகளில் மலையேறும் பலரும் அவற்றை விரும்பத்தகாத அனுபவங்களுடனேயே தொடர்புபடுத்திப் பேசுகிறார்கள்.

ஆனால், இந்தச் சிறிய புழு வகையைச் சேர்ந்த உயிரினம், உயிரியல் ரீதியாக கவர்ச்சிகரமானது மட்டுமின்றி சூழலியல் அமைப்புகளிலும் மருத்துவத்திலும் அளப்பரிய பங்காற்றுகின்றன.

மெல்லுடலிகள் பிரிவைச் சேர்ந்த இவை, பெரும்பாலும் குளங்கள், ஓடைகள், ஈரநிலங்கள், அதிக ஈரப்பதம் கொண்ட காடுகள் போன்ற நன்னீர் வாழ்விடங்களில் வாழ்கின்றன. இவற்றில் சில வகைகள் பிற சிற்றுயிர்களை வேட்டையாடி உண்கின்றன. மற்றவை, ஹீமாடோபகஸ் எனப்படும் வகையைச் சேர்ந்தவை. அதாவது, ரத்தம் குடிப்பவை.

இப்படியாக ரத்தம் குடிக்கும் அட்டைகள், விலங்குகள் அல்லது மனிதர்களின் உடலில் தங்களை ஒட்ட வைத்துக்கொண்டு, அவற்றின் முதன்மையான ஊட்டச்சத்து ஆதாரமாக விளங்கும் பிற உயிரினங்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. இதில், மெடிசினல் லீச் என்றழைக்கப்படும் அட்டை வகை, பல நூற்றாண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில்கூட பயன்படுத்தப்படுகிறது.

புரதங்கள், இரும்பு போன்ற ஊட்டச்சத்துகளின் வளமான மூலாதாரமாக அவற்றுக்கு ரத்தம் விளங்குகிறது. அட்டைகளின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கு ரத்தம் தேவை.

Getty Images

அட்டைகள் ஒருமுறை சாப்பிடும்போது, அவை தமது உடல் எடையைவிடப் பல மடங்கு அதிகமான ரத்தத்தைக் குடிப்பதாகக் கூறுகிறார் அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியல் ஆய்வாளர் முனைவர் ப்ரியதர்ஷன் தர்மராஜன்.

"அவை ரத்தத்தை மெதுவாக ஜீரணிக்கும் செரிமான அமைப்பைக் கொண்டுள்ளன. ஆரம்பத்தில் குடிக்கத் தொடங்கும்போது, நம் உடலிலுள்ள பிளாஸ்மாவை வெளியேற்றுகின்றன, இதனால் அதிக ரத்த நாளங்களுக்கு இடம் கிடைக்கும்.

இதன்மூலம் அதிகளவு ரத்தத்தை உறிஞ்ச முடியும். ஓர் அட்டைப்பூச்சி தமது வாழ்நாள் முழுவதும் ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே ரத்தம் குடிக்கும். அதுவே அவற்றுக்கு வாழ்நாள் முழுமைக்குமான ஊட்டச்சத்துகளை வழங்கிவிடும். அவற்றின் நெகிழ்வுத்தன்மை மிக்க தோல் மற்றும் உடல் பகுதி, தமது உடல் எடையைவிடப் பல மடங்கு அதிகமாக விரிவடைவதற்கு உதவுகின்றன," என்றும் விளக்கினார் அவர்.

Subagunam Kannan நமக்கு வலியே தெரியாமல் 'அட்டைகள்' ரத்தம் உறிஞ்சுவது எப்படி?

அவற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, வலிக்காமல் ரத்தம் குடிப்பதுதான். அட்டைக்கடி ஆரம்பத்திலேயே கவனிக்கப்படாமல் போவதற்குக் காரணமாக இருப்பதும் அவற்றின் இந்த உத்திதான்.

அவற்றால் எப்படி ஒருவரின் உடலில் எந்தவித அசௌகரியத்தையும் ஏற்படுத்தாமல், வலியை உண்டாக்காமல் கடித்து, துளையிட்டு, ரத்தத்தை உறிஞ்ச முடிகிறது?

அதற்கு அடிப்படையாக இருப்பது, அட்டைகளின் உமிழ்நீரில் உள்ள ரசாயனங்களின் கலவை என்கிறார் முனைவர் ப்ரியதர்ஷன்.

"அவற்றின் உமிழ்நீர் ஒரு ரசாயனத் தொழிற்சாலை என்று கூறலாம். அதில் ரத்த உறைதலைத் தடுக்கும் ஹிருடின் போன்ற ரத்த உறைவு தடுப்பான்கள், ரத்த ஓட்டத்தை எளிதாக்கும் வாசோடைலேட்டட்கள் போன்றவை ரத்தநாளங்களில் செலுத்தப்படுகின்றன.

கடிக்கையில் எந்த வலியையும் ஒருவர் உணராதபடி இருப்பதற்காக சில ரசாயனங்களை உட்செலுத்துகின்றன. இதனால், அவை கடிக்கும் இடம் மரத்துப் போவதால் பெரும்பாலும் வலியை உணர்வதில்லை," என்று அவர் விளக்கினார்.

அட்டை ஒன்று, அதன் வாய்வழி உறிஞ்சியைப் பயன்படுத்தி தோலில் ஒட்டிக்கொள்ளும்போது, மயக்க மருந்தை ஒத்த ரசாயனங்களின் கலவை கொண்ட உமிழ்நீரை வெளியிடுகிறது. இந்த ரசாயனம் சருமத்தை மரத்துப் போகச் செய்கிறது. இதன் விளைவாக, நாம் அதனால் கடிக்கப்படுவதையோ நமது ரத்தம் உறிஞ்சப்படுவதையோ உடனடியாக உணர்வதில்லை.

Getty Images

தேசிய மருத்துவ நூலக (National Library of Medicine) ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரையின்படி, அட்டையின் உமிழ்நீரில் ஹிருடின் எனப்படும் சக்தி வாய்ந்த ரத்த உறைவு எதிர்ப்பு ரசாயம் உள்ளது. இது ரத்தம் உறைவதைத் தடுக்கிறது. அதோடு, "த்ரோம்பின் எனப்படும் ரத்தத்தில் உள்ள உறைய வைக்க உதவும் நொதி செயல்படுவதைத் தடுப்பதன் மூலம், ஹிருடின் ரசாயனம் ரத்தம் கட்டியாவதைத் தடுக்கிறது. இதனால், உடலில் ஒட்டிக்கொண்டு, துளையிட்டு, அதில் வெளியேறும் ரத்தத்தை அவற்றால் நீண்ட நேரம் உறிஞ்ச முடிகிறது" என்கிறது.

அறிவியல் ஆய்வுகளின்படி, இந்த ஹிருடின் ரசாயனத்துடன், கூடுதலாக, காலின், ஹைலுரோனிடேஸ், ஹிஸ்டமைன் போன்ற பிற சேர்மங்களும் இணைந்து, ரத்த ஓட்டம் சீராக இருப்பதைப் பராமரிக்கவும், கடித்த இடத்திற்கு அருகிலுள்ள ரத்த நாளங்களை விரிவுபடுத்தி அதிக ரத்தம் பாயவும் உதவுகின்றன. இந்த ரசாயனங்கள், அட்டை கடித்த இடத்தில் வீக்கம் ஏற்படுவதைக் குறைத்து, ரத்த நாளங்கள் சீராக அட்டைகளுக்கு உணவளிப்பதை உறுதி செய்கின்றன.

பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளில், அவற்றின் உமிழ்நீரில் இந்தச் செயல்முறைகளுக்குப் பல வழிகளில் உதவக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட உயிரியல் சேர்மங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவையனைத்தும், ரத்தத்தைத் திறம்படப் பிரித்தெடுக்கவும், அவை உறிஞ்சுவதை, உறிஞ்சப்படும் உயிரினம் கண்டறிவதைத் தவிர்க்கவும் உதவுகின்றன.

Getty Images

த்ரோம்போசிஸ் அண்ட் ஹீமோஸ்டாசிஸ் போன்ற ஆய்விதழ்களில் வெளியிடப்பட்ட ஆய்வுகள், அட்டை உமிழ்நீரில் இருந்து வரும் ரத்த உறைவு தடுப்பு ரசாயனங்கள், ரத்தம் உறைவதைத் தடுப்பதாகவும், இதனால் அட்டை உறிஞ்சுவதை நிறுத்திய பிறகும் ரத்தப்போக்கு தொடர வித்திடுவதாகவும் கூறுகின்றன.

பொதுவாக, ஓர் அட்டை சுமார் 20 முதல் 45 நிமிடங்கள் வரை ரத்தம் உறிஞ்சுகிறது. அந்த நேரத்தில் அது 5 முதல் 15 மில்லிலிட்டர் வரையிலான ரத்தத்தை உட்கொள்ளும்.

அவை உட்கொண்டுவிட்டு உடலில் இருந்து பிரிந்த பிறகும்கூட, அவற்றின் உமிழ்நீரில் இருந்து உடலில் கலக்கப்பட்ட ரத்த உறைவு தடுப்பான்களின் விளைவுகள் ரத்தம் தொடர்ந்து கசியும்.

அட்டை நம்மை கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

வழக்கமாக அட்டை நம்மைக் கடித்தாலும் அதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் விளைந்துவிடுவதில்லை. ஆனால், கடித்த இடத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். அட்டைக் கடியை கையாள்வதற்குரிய சரியான வழியைத் தெரிந்துகொள்வது தொற்று மற்றும் அதீத ரத்தப்போக்கைத் தடுக்கலாம்.

அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தைச் சேர்ந்த உயிரியலாளர் முனைவர் தணிகைவேல் இதுகுறித்துப் பேசியபோது, "காட்டுப் பகுதிகளில், குறிப்பாக கடல்மட்டத்தில் இருந்து சற்று உயர்வாக இருக்கக்கூடிய பகுதிகளில், மழைப்பொழிவுக் காலங்களில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன.

அட்டைகள் கடிப்பதால் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் நேர்ந்துவிடப் போவதில்லை. இருப்பினும் அந்த சூழலுக்கு நாம் செல்லும்போது அட்டைகளிடம் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது அவசியம்," என்று அறிவுறுத்தினார்.

Getty Images

"சோப், உப்பு, டெட்டால் போன்றவற்றை காலணிகளில் தடவிக்கொள்வது அட்டைக்கடியில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவலாம். ஒருவேளை அட்டை கடித்துவிட்டாலும்கூட, அவற்றைக் கைகளால் பிடுங்கி எறிவது கூடாது" என்று வலியுறுத்துகிறார் தணிகைவேல்.

"அட்டைகளைக் கைகளால் பிடுங்கும்போது, அவற்றின் பற்கள் உடலிலேயே தங்கிவிட வாய்ப்புள்ளது. இதனால், ரத்தப்போக்கு தொடர்ந்து நீடித்திருக்கும் நேரம் அதிகமாகலாம். பழங்குடிகள் பொதுவாக, காட்டுக்குள் செல்லும்போது சிறிய துணிப்பைகளில் சிறிதளவு உப்பு எடுத்துச் செல்வார்கள்.

அட்டை கடித்துவிட்டால், கடித்த இடத்திற்கு அருகில் கொஞ்சம் உப்பு எடுத்து வைத்தால், அவை தானாக அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடும். அவற்றுக்கு எதிராக உப்புத்தன்மை கொண்ட பொருட்கள் நல்ல எதிர்வினையாற்றுவதால் அதைக் கையில் வைத்துக்கொள்வது பயனளிக்கும்," என்று விளக்கினார் அவர்.

அட்டைகள் சுற்றுச்சூழலில் எப்படிப் பங்காற்றுகின்றன?

பலரும் இவற்றை ஒட்டுண்ணிகளாக மட்டுமே பார்த்தாலும், அவை நீர் சார்ந்த சூழலியல் அமைப்புகளில் முக்கியப் பங்காற்றுகின்றன என்கிறார் முனைவர் ப்ரியதர்ஷன்.

"அட்டைகளில் பலவும் சிற்றுயிர்களை வேட்டையாடி உண்பதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன. சில நீர்வாழ் அட்டைகள் நத்தைகளையும் உணவாகக் கொள்கின்றன.

சில ஊனுண்ணி அட்டைகள் உள்ளன. ஹீமோப்சிஸ் சில்வெஸ்ட்ரிஸ், ஹீமோபிஸ் டெரெஸ்ட்ரிஸ் போன்றவை மேற்குத்தொடர்ச்சி மலையில் காணப்படும் மண்புழுக்கள் மற்றும் பிற முதுகெலும்பற்ற உயிரினங்களை உண்கின்றன," என்றும் அவர் விவரித்தார்.

இவ்வாறாக, நன்னீர் சூழலியல் அமைப்புகளில் வேட்டையாடிகளாகச் செயல்படுவதோடு, மீன்கள், பறவைகள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களுக்கு இரையாகவும் இவை இருக்கின்றன.

அதுமட்டுமின்றி, அட்டைகளில் பெரும்பாலான வகைகள் உயிர் வாழ சுத்தமான ஆக்ஸிஜன் நிறைந்த நீர் தேவைப்படுவதால், விஞ்ஞானிகள் இவற்றின் எண்ணிக்கை பரவலாக இருப்பதை நன்னீர் வாழ்விடங்களின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான குறியீடுகளாகப் பயன்படுத்துகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.