விஜய் - சங்கீதா இடையேயான சம்பவம் தனிப்பட்ட விவகாரம் என கருத்து தெரிவித்த நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜயிடம் விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு உள்ளதாக குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மற்றொரு மனுவில் விஜய் தன்னை நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க மறுக்கிறார் என்றும், வழக்கு முடியும் வரை அங்கே இருக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய்யுடன் தொடர்பில் இருக்கும் நடிகை த்ரிஷா என்ற தகவலும் பரப்பப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “நடிகர் விஜய் அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றியும், அவருடைய அரசியல் வருகை பற்றியும் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. விஜயை நான் அறிந்தது ஒரு மரியாதையான, அமைதியான, மென்மையான இணை நடிகராக மட்டுமே. அவருடைய தாயாரைப் பற்றியும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதற்கும் மேலாக எனக்கு எந்த தனிப்பட்ட அறிவும் இல்லை.
சமீபத்தில் நான் ஒரு மேடையில் பேசிய சில வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, விஜயின் அரசியல் வருகைக்கும் இப்போது பேசப்படும் தனிப்பட்ட விஷயங்களுக்கும் தவறாக இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளிதழ் என்னிடம் கருத்து கேட்டபோது, மக்கள் தனிப்பட்ட விஷயங்களையும் அரசியல் செயல்பாடுகளையும் தனித்தனியாக பார்க்கத் தெரிந்தவர்கள் என்று தான் நான் கூறினேன். மேலும், இது தேர்தல் காலம் என்பதால் இந்த விஷயம் அளவுக்கு மீறி பெரிதாக்கப்படுகிறது என்றும் சொன்னேன்.
இன்னும் ஒரு விஷயம்—பெண்களின் நலன் குறித்து உண்மையாக அக்கறை இருப்பின், நீதிக்காக போராட வழியில்லாமல், சட்ட உதவியோ பொருளாதார ஆதரவோ இல்லாமல், அடுத்த உணவு கூட உறுதியில்லாமல் வாழும் பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் இதே அளவு கவனம் செலுத்தப்பட வேண்டாமா? இந்த அறிக்கை என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஏற்பட்ட தவறான புரிதலை சரி செய்யவும் மட்டுமே” என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக், “விஜய் விவகாரம் தனிப்பட்ட விவகாரம் எனக் கருத்து சொல்லாது ஒதுங்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களே! இப்போது வரை எளிய, நடுத்தர, விளிம்பு நிலை மக்களின் வீட்டுச் சிக்கல்களுக்கு கேமராவுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் பஞ்சாயத்து செய்வது ஏன்? அதற்குரிய உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது? அதுவெல்லாம் சரிதானா? அப்போதெல்லாம் எந்த உறுத்தலும், தயக்கமும் இருப்பதில்லையே ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.