திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார். பின்பு மகளிர் தின வாழ்த்து தெரிவித்து பேட்டி அளித்தார். மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட, தாய்க்கிழவி படத்திற்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் சனி பகவான் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சனிக்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து நளன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபட்டு செல்கின்றனர். இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனி பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சனி பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாற்றில் கூடி சனி பகவானை வழிபட்டு செல்கின்றனர். சனி பெயர்ச்சி முடிந்து 48 நாட்களுக்கு இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும், இந்நிலையில் சனிப்பெயர்ச்சி முடிந்து இரண்டாம் நாளான இன்று பிரபல திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் தங்க காக்கை வாகனத்தில் வீற்றிருந்த சனீஸ்வர பகவானையும் தரிசனம் செய்தார். கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் சிவகார்த்திகேயனை சூழ்ந்து முண்டியடித்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் சிலர் செல்பியும் எடுத்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், இன்று சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட தாய்க்கிழவி படத்திற்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தரிசனம் சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்தார்.