மத்திய கிழக்கு நாடுகளில் (ஈரான்-இஸ்ரேல்) நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் எரிசக்தி விலை அதிகரித்துள்ளதால், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நேற்று உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விலை மாற்றத்தின்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60-ம், வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.115-ம் உயர்த்தப்பட்டுள்ளது. 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர் வாங்கும் 10 கோடிக்கும் அதிகமான ஏழை எளிய மக்களுக்கு இந்த விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்கள் தொடர்ந்து தங்களுக்குரிய மானிய விலையிலேயே சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களுக்கு வழங்கப்படும் ரூ.300 மானியம் மாற்றமின்றித் தொடரும்.

மானியமில்லாத சிலிண்டர்களைப் பயன்படுத்தும் பொதுவான நுகர்வோருக்கு விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் முக்கிய நகரங்கான சென்னையில் ரூ.928.50 (பழைய விலை: ரூ. 868.50), டெல்லி: ரூ. 913, மும்பை: ரூ. 912.50, கொல்கத்தா: ரூ. 939 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலை ரூ.115 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இதன் விலை தற்போது ரூ. 2,043.50 ஆக உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் எரிபொருள் போக்குவரத்துத் தடைபட்டுள்ளதால் சர்வதேச அளவில் விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வின்படி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.134 வரை உயர்த்த வேண்டிய சூழல் இருந்ததாகவும், ஆனால் மக்களைப் பாதுகாக்க அரசு அந்தப் பாரத்தைத் தாங்கிக்கொண்டு ரூ.60 மட்டுமே உயர்த்த அனுமதித்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தற்போது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.