#BREAKING விஜய் தன்னை வீட்டுக்குள் அனுமதிக்க மறப்பதாக சங்கீதா புதிய மனுதாக்கல்
Top Tamil News March 08, 2026 01:48 PM

விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இடையிட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தனது கணவர் விஜய் தன்னை வீட்டுக்குள் அனுமதிக்க மறப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

விஜய் மனைவி தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவில் பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முன்னணி நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, தங்களை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தங்களுக்கு இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், சென்னை நீலாங்கரையில் உள்ள தங்களது இல்லத்திற்குள் நுழைய விஜய் அனுமதி மறுப்பதாக சங்கீதா இந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 26 ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இருந்து, இரு குழந்தைகளைப் பெற்றெடுத்த நிலையில், இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளது தமக்கு பெரும் மன உளைச்சலைத் தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ள சங்கீதா, திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக விஜய்யை மிகவும் அக்கறையுடனும் கவனத்துடனும் பார்த்துக்கொண்டதாகவும், தற்போது விவாகரத்து கோரி வழக்கு நடைபெற்று வருவதால் சென்னையில் தனக்கு தங்குவதற்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார். லண்டனில் வசித்து வரும் தனக்கு சென்னையில் சொந்தமாக வீடு ஏதும் இல்லை என்றும், நீலாங்கரையில் உள்ள வீட்டில் தனக்கு சரிபாதி உரிமை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு முடியும் வரை அந்த வீட்டிற்குள் தங்குவதற்கு விஜய் அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தன்னை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என கூறினால் விஜய் தரப்பு வழக்கறிஞர்களை வைத்து மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விவாகரத்து வழக்குகளுக்கு இடையே தமக்கு சேர வேண்டிய நியாயமான ஜீவனாம்சத்தை விஜய் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திரைப்படங்கள் வாயிலாக கோடிக்கணக்கான வருமானம் ஈட்டி வரும் விஜய், தமக்கும் குழந்தைகளுக்கும் சேர வேண்டிய உரிமைகளை முறையாக வழங்க வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக உள்ளது. 

தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக பரஸ்பரம் பிரிந்து செல்ல பலமுறை முயற்சி செய்தும் விஜய் அதற்கு இணங்கவில்லை என்றும், ஒரு நடிகையுடனான தொடர்பு காரணமாகவே அவர் விவாகரத்து கோரியிருப்பதாகவும் சங்கீதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.