நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் கடந்த ஒரு வருடமாக படப்பிடிப்பில் இருந்து வரும் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளார். ஏற்கனவே இந்திய சினிமாவின் பல்வேறு நட்சத்திரம் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்கள். இப்படியான நிலையில் கடைசியாக இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார். ஜெயிலர் 2 படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் ரஜினிகாந்தின் நண்பன் கதாபாத்திரத்தில் போலீஸாக தோன்ற இருக்கிறார். ஷாருக் கான் நடிக்கும் காட்சிகள் மும்பை மற்றும் சண்டிகரில் 8 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. ஷாருக் கான் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து ஒரே படத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும். ஷாருக் கான் தவிர்த்து ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால் , எஸ் ஜே சூர்யா , விஜய் சேதுபதி , வித்யா பாலன் , ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சன் பிக்ச்சர்ஸ் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தை தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. ஜெயிலர் திரைப்படம் உலகளவில் ரூ650 கோடி வசூல் செய்து ரஜினியின் கரியரில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது அதை விட பல மடங்களு பிரம்மாண்டமாக ஜெயிலர் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.