Getty Images சித்தரிப்புப் படம்
சென்னையில் சீர்திருத்த திருமணம் ஒன்றை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
"இந்த மாதிரி திருமணம் செய்வதை என்னால் ஊக்குவிக்க முடியாது, இதை நான் பதிவு செய்யமாட்டேன்," என திருமணத்தை பதிவு செய்ய சென்றபோது விருகம்பாக்கம் சார் பதிவாளர் ரவீந்திரநாத் கூறியதாக தெரிவிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தென்சென்னை மாவட்ட செயலாளர் வேல்முருகன்.
சீர்திருத்தத் திருமணங்களுக்கு தமிழ்நாட்டில் சட்டப்பூர்வ அங்கீகாரம் இருக்கும் நிலையில், அதன் பதிவு நிராகரிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு விவாதப் பொருளாகியுள்ளது.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள பதிவுத்துறை தென்சென்னை மாவட்ட பதிவாளர் சுடரொளி, "ஆவணங்கள் சரியாக இருந்தால் சீர்திருத்த திருமணங்களை பதிவு செய்வதில் எந்த சிக்கலும் இல்லை" எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?
பதிவு மறுக்க சொல்லப்பட்ட காரணம் என்ன?செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த உஷா ஆகிய இருவருக்கும் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் சீர்திருத்த திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு அதனை பதிவு செய்ய அந்த பகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து 23-ஆம் தேதி நேரில் சென்றனர். உரிய ஆவணங்களோடு அணுகிய போதும் அவர்களது திருமணத்தை ஏற்க சார்பதிவாளர் மறுத்ததாக வேல்முருகன் குற்றம் சாட்டுகிறார்.
திருமணம் மறுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டபோது இரண்டு காரணங்களை மேற்கோள் காட்டி 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம் என எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
"அதில் திருமணம் நடைபெற்ற இடத்தின் முகவரியில் குழப்பம் மற்றும் திருமணத்தை தலைமையேற்றவரின் கையொப்பம் இல்லை என்று குறிப்பிடப்பட்டது," என்கிறார் வேல்முருகன்.
இந்தப் பதிவு மறுக்கப்பட்டது தொடர்பாக மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
'ஆவணங்களைக் காட்டிய பிறகு ஏற்கவில்லை'
BBC மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தென்சென்னை மாவட்ட செயலாளர் வேல்முருகன்.
"ஒவ்வொரு முறையும் சீர்திருத்தத் திருமணங்களைப் பதிவு செய்யும்போது போராட வேண்டியுள்ளது" என்கிறார் திருமணத்தை முன்னின்று நடத்திய வேல்முருகன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அண்ணா முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட சீர்திருத்தத் திருமணத்தின் பதிவு முறைகளை மட்டுப்படுத்தும் வகையில் சார் பதிவாளரின் அணுகுமுறை உள்ளது." என குற்றம் சாட்டினார்.
"திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்தது குறித்து கேள்வி எழுப்பிய போது 'இது போன்ற திருமணங்களை நான் ஊக்குவிப்பது இல்லை' எனப் பதிலளித்தார். மறுப்புக்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக கேட்ட போது 'திருமணம் நடந்த இடம் எங்கள் எல்லைக்குள் இல்லை' என்று கூறினார்" என வேல் முருகன் தெரிவித்தார்.
2025-ஆம் ஆண்டில் தங்களது கட்சி அலுவலகத்தில் 6 சீர்திருத்த திருமணங்கள் நடத்தப்பட்டு இதே சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது எனக் குறிப்பிடுகிறார் வேல்முருகன்.
மேலும், "விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த ஆவணங்களையும், எங்கள் கட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலிகிராமம் பகுதி விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்டது என்பதற்கான ஆவணங்களையும் காட்டிய பிறகும் அதனை அவர் ஏற்கவில்லை" என்றார்.
திருமணத்தை பதிய மறுத்தது தொடர்பாக மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்து 20 நாட்கள் ஆனதாக குறிப்பிடும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கிறார்.
மனு நிராகரிக்கப்பட்டது ஏன்?
Getty Images சித்தரிப்புப் படம்
சீர்திருத்த திருமணம் நிராகரிக்கப்பட்டதற்கு "கட்சி அலுவலக முகவரி முக்கிய காரணம்" என்று கூறியது குறித்து விளக்கம் பெற விருகம்பாக்கம் சார் பதிவாளர் ரவீந்திரநாத்-ஐ பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. "இந்த விவகாரம் பற்றி எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் அந்த திருமணத்தை பதிவு செய்ய மாவட்ட பதிவாளர் அனுமதி கொடுத்துவிட்டார்" என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் இது தொடர்பான தகவல் தங்களிடம் தெரிவிக்கப்படவில்லை என்கிறார் வேல்முருகன்.
இருப்பினும், தொடக்க நிலையில் அந்த மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ரவீந்திரநாத் பதிலளிக்கவில்லை.
"திருமண பதிவில் தவறு ஏற்பட்டால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியது நாங்கள் தான்" என்கிறார் பதிவுத்துறை தென்சென்னை மாவட்ட பதிவாளர் சுடரொளி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்த புகாரில் களத்திற்கு சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டு நிலையை தெரிந்துகொண்டோம். அதில் கோடம்பாக்கம், விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகங்கள் அருகருகே இருப்பதும், மார்க்சிஸ்ட் அலுவலகத்தின் அமைவிடம் 'சாலிகிராமம்' என்று குறிப்பிடப்படாமல் இருப்பதும் தான் பிரச்னைக்கு காரணம் என்பதை தெரிந்துகொண்டோம்." என்றார்.
"இனி வரும் காலங்களில் அந்த அலுவலகத்தில் இருந்து வரும் அனைத்து திருமணங்களையும் பரிசீலித்து பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்" என்றார் அவர்.
மேலும், "இந்த திருமண பதிவில் சம்மந்தப்பட்ட இணையர் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் திருமணம் நடத்தப்பட்ட இடத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற இறுதி வாய்ப்பில் அவர்கள் இருந்தனர், ஆனால் அதற்குரிய ஆவணங்களை சரி பார்க்க வேண்டியது எங்கள் கடமை, அதில் தவறு ஏற்பட்டால் அந்தப் பதிவை மேற்கொண்ட சார் பதிவாளர் பின்னாளில் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்" என்று அவர் கூறினார்.
சார் பதிவாளரின் அணுகுமுறை குறித்த வேல்முருகனின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த பதிவாளர் சுடரொளி, "பெற்றோர் இல்லாமல் நடத்தப்படும் திருமணங்களில் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அதில் சிறிய அளவிலும் பிரச்னை இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் சார் பதிவாளர் சொன்னதை தவறான கண்ணோட்டத்தில் புரிந்துகொண்டிருப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
ஆவணங்கள் சரியாக இருந்தால் சீர்திருத்த திருமணங்களை பதிவு செய்வதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று அவர் விளக்கமளித்தார்.
சீர்திருத்த திருமணத்தை சார் பதிவாளரால் நிராகரிக்க முடியுமா?
BBC முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நயினார்.
"நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் சீர்திருத்த திருமணங்களை பதிவு செய்வதை எவராலும் தடுக்க முடியாது" என்கிறார் முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நயினார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சீர்திருத்தத் திருமணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலகத்தை நாடுவோர், இந்து திருமணச்சட்டப்படி உள்ள படிவத்தில் பிரிவு 7 (அ) எனக் குறிப்பிட்டு உரிய ஆவணங்களை மட்டும் வழங்கினால் போதுமானது" என்றார்.
மேலும், "கட்டாய திருமணம், கடத்தல் திருமணம் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் திருமணங்களின் போது ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர்கள் யாரேனும் ஒருவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் வழங்கும் அறிவுரைகளைக் காரணம் காட்டி சில சார் பதிவாளர்கள் திருமணங்களைப் பதிவு செய்ய தடை விதிக்கிறார்கள், இது தவறான அணுகுமுறை." என்று தெரிவித்தார்.
ஆனால் குறிப்பிட்ட வழக்கில் மணமக்களின் பெற்றோர் குறித்து சார்பதிவாளர் எதுவும் குறிப்பிட்டதாக புகார் இல்லை.
"ஒரு சீர்திருத்த திருமணம் பதிவு செய்வது மறுக்கப்பட்டால், அந்த சார் பதிவாளர் மீது மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம். அதிலும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் பதிவுத்துறை துணை தலைவர் அல்லது தலைவரை அணுகலாம், அவர் செய்தது தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அவர் தெரிவித்தார்.
சுயமரியாதை திருமணம் என்றால் என்ன?சீர்திருத்த திருமணம் அல்லது சுயமரியாதை திருமணம் என்பது மதம் மற்றும் சாதி சடங்குகளைக் கடந்து மணமக்கள் மற்றும் சாட்சியங்களை மட்டும் வைத்து எளிய முறையில் நடத்தப்படுகிறது. 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து திருமணச்சட்டம், 1967-இல் தமிழ்நாடு அரசால் மாநில திருத்தம் கொண்டு வரப்பட்டு அதில் பிரிவு 7 (அ) சேர்க்கப்பட்டது.
இந்த சட்டத்தின்படி தம்பதிகள் மாலை மாற்றிக்கொள்வது, உறுதி மொழி ஏற்பது, தாலி கட்டிக்கொள்வது என மூன்று வழிமுறைகளில் ஒன்றோ அல்லது மூன்றையும் பின்பற்றி சீர்திருத்த திருமணம் செய்துக்கொள்ளலாம் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
சுயமரியாதை திருமணம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?"சுயமரியாதை திருமணத்தைப் பதிவு செய்ய பதிவுத்துறையை நாடும்போது சிலர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள்" என்கிறார் தமிழ்நாடு சாதி மறுப்பு இணையர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் இரமேசு பெரியார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "கொள்கையால் ஈர்க்கப்படுபவர்கள், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் மட்டுமே சீர்திருத்த திருமணத்தை நோக்கிச் செல்கின்றனர், ஆனால் பெற்றோர் வரவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி பல இடங்களில் பதிவு மறுக்கப்படுகிறது" என்றார்.
"தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம் விதி 7-இல் சார் பதிவாளர் மனநிறைவு அடையாவிட்டால் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பலாம் என்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. போலி திருமணங்களை தடுப்பதற்காக வழங்கப்பட்ட அதிகாரங்களை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்" என்கிறார் வழக்கறிஞர் இரமேசு பெரியார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு