திமுகவில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: இந்த முறை குறைந்த தொகுதிகளில் போட்டியிடும் திமுக?புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி!
Seithipunal Tamil March 20, 2026 09:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஆளும் திமுக இதுவரை இல்லாத அளவிற்கு வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணி கட்சிகளை அப்படியே தக்க வைத்துக் கொண்டதுடன், இந்த முறை தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட மேலும் 10 கட்சிகளை கூட்டணியில் இணைத்துள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் திமுக தலைமைக்கு கூடுதல் சவால் உருவாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளை கோரிய நிலையில், இந்த முறை 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த தேர்தலில் இருந்ததை விட ஒரு தொகுதி குறைவாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் சிபிஎம் கட்சி கூடுதல் தொகுதிகளை கோரி வருவதால், அந்த கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

திமுக கூட்டணியில் முக்கிய இடம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இந்த முறை 10 தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்க்கிறது என்று கூறப்படுகிறது. இல்லையெனில் தேமுதிகவுக்கு வழங்கப்படும் தொகுதிகளை விட அதிகமாக வழங்க வேண்டும் என்பது திருமாவளவனின் நிலைப்பாடாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கூட்டணியில் இணைந்த கையோடு ஒரு ராஜ்யசபா இடம் பெற்ற தேமுதிகக்கு சுமார் 7 தொகுதிகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்கள் வழங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, இந்த முறை சுமார் 165 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை உருவாகலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அதாவது, கூட்டணியில் கூடுதலாக இணைந்துள்ள கட்சிகளுக்கு இடம் ஒதுக்க வேண்டிய அவசியம் காரணமாக, கடந்த தேர்தலை விட குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் திமுக களம் காணும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.