நாளை அவசரமாக கூடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மற்றும் மாநிலச் செயற் குழுவின் கூட்டம்; தொகுதி பங்கீடு இழுபறி குறித்து ஆலோசனை ..!
Seithipunal Tamil March 21, 2026 05:48 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மற்றும் மாநிலச் செயற் குழு கூட்டம் நாளை அவசர கூட்டமாக நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெற்று வருகின்றன. 

அதன்படி, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதுவரை திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 

முதல் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கிய 06 தொகுதிகளைவிட அதிக தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அடுத்து, மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையில் கடந்த முறை ஒதுக்கிய ஆறு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்தது. ஆனால், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்திருப்பதால், ஐந்து தொகுதிகள் பெற்றுக்கொள்ளுங்கள் என திமுக தரப்பில் இருந்து கூறப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால், அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 05 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 06 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை 05 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மற்றும் மாநிலச் செயற் குழு கூட்டம் நாளை அவசர கூட்டமாக நநடைபெறவுள்ளது.  இந்த மாநில மற்றும் மாநிலச் செயற் குழுவில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.