ரியாத் நகரில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்... இந்தியர் ஒருவர் பலி...! - மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி
Seithipunal Tamil March 21, 2026 06:48 PM

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் மேற்கு ஆசியப் போரில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சக கூடுதல் செயலாளர் அசீம் மகாஜன் தெரிவிக்கையில், 'ரியாத் தாக்குதலில் இந்தியர் உயிரிழந்தது வியாழக்கிழமை நள்ளிரவு உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

தற்போது வரை 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவரைக் காணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வரவும், காணாமல் போனவரைத் தேடவும் சவுதி அரேபியா, ஓமன், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகங்கள் அந்தந்த நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளன.

இதற்கிடையில், ஈராக்கில் சிக்கியிருந்த 15 இந்திய ஊழியர்கள் மீட்கப்பட்டு சவுதி வழியாக இந்தியா திரும்புகின்றனர். கடந்த பிப்ரவரி 28 முதல் வளைகுடா நாடுகளிலிருந்து சுமார் 3 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.