அபிஷேக் சர்மா இல்லை..! அடுத்த யுவ்ராஜ் சிங் இவர்தான்! – பத்ரிநாத் கூறிய இளம் வீரர் யார் தெரியுமா?
Seithipunal Tamil March 21, 2026 07:48 PM

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் வீரர்களை ஒன்றிணைத்து பயிற்சியை தொடங்கியுள்ளன.

அந்த வகையில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கூட தற்போது தங்களது வீரர்களுடன் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான சுப்பிரமணியம் பத்ரிநாத், “அடுத்த யுவ்ராஜ் சிங் யார்?” என்பது குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது:“வைபவ் சூர்யவன்ஷியை பார்க்கும் போது இளம் வயதில் இருந்த யுவ்ராஜ் சிங்கை நினைவுபடுத்துகிறது. அவர் அடிக்கும் சிக்ஸர்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. இந்த வயதிலேயே அவர் அடிக்கும் சில சிக்ஸர்கள் மைதானத்தை தாண்டி செல்கின்றன. யுவ்ராஜ் சிங் அண்டர்-19 போட்டிகளில் அடித்த சிக்ஸர்களை போலவே தற்போது வைபவ் சூர்யவன்ஷியும் அடிக்கிறார்.”

மேலும், இந்த ஐபிஎல் சீசன் வைபவ் சூர்யவன்ஷிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். கடந்த சீசனில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்த முறை பவுலர்கள் அவருக்கு எதிராக சிறப்பு திட்டங்களுடன் வரலாம் என்றும் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு இந்திய டி20 அணியின் இளம் துவக்க வீரர் அபிஷேக் சர்மாவின் பேட் ஸ்விங் யுவ்ராஜ் சிங்கை போல் இருப்பதாகவும், பெரிய சிக்ஸர்கள் அடிக்கும் திறன் இருப்பதால் அவர் தான் அடுத்த யுவ்ராஜ் சிங் என்று பலரும் கூறி வந்தனர்.

ஆனால் தற்போது பத்ரிநாத், “அடுத்த யுவ்ராஜ் சிங் வைபவ் சூர்யவன்ஷி தான்” என்று கூறியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.