தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் முல்லை அவென்யூ பகுதியைச் சேர்ந்த சித்தா மருத்துவர் அருண்குமார் என்பவரது மனைவி அபிநயா திருமணமான மூன்று மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் பொறியாளரான அபிநயாவுக்கும் அருண்குமாருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே அபிநயாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அருண்குமார் அவரை அடிக்கடி மனரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார். அபிநயாவின் செல்லிடப்பேசியை நள்ளிரவில் எடுத்துப் பார்ப்பது மற்றும் அவர் யாரிடம் பேசுகிறார் என்று அடிக்கடி கேள்வி எழுப்பிச் சண்டையிட்டு வந்ததால் மனமுடைந்த அபிநயா தனது மென்பொருள் பணியையும் இடையில் நிறுத்தியுள்ளார்.
கணவரின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த அபிநயா தனக்கு யாருடனும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் திருமணத்திற்கு முன்பும் தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் பலமுறை உருக்கமாக எடுத்துக்கூறியுள்ளார். தான் உண்மையாகவே இருப்பதை நிரூபிக்கப் பலமுறை சத்தியம் செய்தும் அருண்குமார் அதனை நம்பாமல் தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த அபிநயா கடந்த மாதம் பதினேழாம் தேதி இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துத் தகவலறிந்த தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் கணவரின் தொடர் சந்தேகமே இந்தப் பெண்ணின் மரணத்திற்கு முக்கியக் காரணம் என்பது உறுதியானது.
அபிநயா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது கையில் அருண் என்று ஊசியால் கீறி ரத்தத்தால் கணவரின் பெயரை எழுதியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. டாட்டூ போட்டால் கூட அழிந்துவிடும் ஆனால் இந்த ரத்தத்தால் எழுதிய பெயர் அழியாது என்று அவர் தனது செல்போனில் பதிவிட்டுள்ளார்.
மேலும் உனக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்று மனதால் கூட நினைக்கவில்லை என்றும் நீ என்ன நம்பினாலும் நம்பாவிட்டாலும் நான் உனக்கு உண்மையாகவே இருந்தேன் என்றும் மிக உருக்கமாகத் தனது கடைசிச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்.
தான் கையில் ரத்தத்தால் எழுதிய பெயரைப் புகைப்படம் எடுத்துத் தனது கணவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்ப முயன்று பின்னர் அதனை அனுப்பாமல் வைத்திருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நடத்தை சந்தேகத்தால் இளம் பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டிய புகாரின் பேரில் சித்தா மருத்துவர் அருண்குமாரைத் தாம்பரம் போலீசார் முறைப்படி கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.
அழகான வாழ்க்கை அமைய வேண்டிய இளம் தம்பதியினரிடையே ஏற்பட்ட சந்தேகத்தீ ஒரு உயிரைப் பலி வாங்கியுள்ள சம்பவம் உறவினர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் இளம் தம்பதியினர் தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்க்காமல் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.